
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி இன்று அம்மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்டத்தில் ஓகி புயலால் இறந்த அனைவரின் குடும்பத்துக்கும் ரூ.20 லட்சம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும். சேதமடைந்த வாழை, ரப்பர் மரங்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ள நிவாரண தொகையை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் இன்று முழு அடைப்பு போராட்டம் அறிவித்துள்ளன. திமுக, காங்கிரஸ் பா.ஜ. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன
இதையடுத்து இன்று கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள், ஆட்டோக்ள் ஓடவில்லை. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டடிருந்த நிலையில், நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசுப் பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்
10 அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்கப்பட்டதால் நாகர்கோவிலில் இருந்து மாவட்டத்தின் இதர பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் நிறுத்தி விட்டது. இதனால் பயணிகள் ஊருக்கு செல்ல முடியாமல் திண்டாடினர்.
இதனை அடுத்து, பேருந்துகளை இயக்கக் கோரி, நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு வந்த போலீசார், பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
இதனிடையே அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர். முழு அடைப்பு போராட்டத்தையொட்டி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.