நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்....அனல் பறக்கும் விவாதங்கள் காத்திருக்கிறது

First Published Dec 15, 2017, 7:48 AM IST
Highlights
parliment moonsoon session started from today


குஜராத் தேர்தலையொட்டி தள்ளிவைக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. 

குஜராத், இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள், ரபேல் போர் விமான ஒப்பந்தம், விவசாயிகள் பிரச்சினை, ஜி.எஸ்.டி. வரி குளறுபடி, நிதித்தீர்வு வைப்புத்தொகை காப்பீடு மசோதா உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்புவார்கள் என்பதால், அனல் பறக்கும் விவாதங்கள் அடுத்து வரும் நாட்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குஜராத் தேர்தல்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வழக்கமாக நவம்பர் முதல்வாரத்தில் தொடங்கி, டிசம்பர் நடுப்பகுதியில் முடிந்துவிடும். ஆனால், இந்த முறை குஜராத் சட்டப்பேரவை தேர்தலை காரணம் காட்டி குளிர்காலக் கூட்டத்தொடரை தாமதமாக நடத்த மத்திய அரசு முடிவு செய்தது.

தொடக்கம்

இதற்கு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 15 முதல் ஜனவரி 5ந்தேதி வரை கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இதன்படி, குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று(15ந்தேதி) தொடங்கி ஜனவரி 5-ந்தேதி வரை நடக்கிறது.  இந்த முறை 14 நாட்கள் வேலை நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் செயல்பட உள்ளது. வழக்கமாக 21 வேலை நாட்கள் செயல்படும். 



மசோதாக்கள்

கிடப்பில் உள்ள 25 மசோதாக்கள், 14 புதிய மசோதாக்கள், முஸ்லிம் பெண்கள் கணவரிடம் இருந்து விவாகரத்து  பெற்றபின் ஜீவநாம்சம் பெறும் மசோதா,  முத்தலாக் நடைமுறை தடைச் சட்ட மசோதா, சரக்கு மற்றும் சேவை வரி மாநிலங்களுக்கு இழப்பீடு சட்டம், திவால் சட்டம், என்.சி.பி.சி. மசோதா, வாகனங்கள் தொடர்பான சட்டம், நிதித்தீர்வு வைப்புத்தொகை காப்பீடு மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றன. 

ஒத்திவைப்பு

நாடாளுமன்றக் கூட்டம் இன்று தொடங்கியவுடன், மரணமடைந்த எம்.பி.க்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, கூட்டம் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்படும். குஜராத், மற்றும்இமாச்சலப்பிரதேச சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள் கிழமை நடைபெற இருப்பதால், அன்று நாடாளுமன்றம் மிகுந்த பரபரப்புடன் காணப்படும். 

விவாதங்கள்

இந்த கூட்டத்தொடரில் ரபேல் போர் விமான ஒப்பந்தம், விவசாயிகள் பிரச்சினை, ஜி.எஸ்.டி. வரி குளறுபடி, நிதித்தீர்வு வைப்புத்தொகை காப்பீடு மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் பிரச்சினையை கிளப்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



அதேசமயம், குஜராத் , இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆளும் பா.ஜனதா கட்சி எம்.பி.களிடையே பெரிய அளவிலான தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும். 

தேர்தல் முடிவு

ஒரு புறம் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டு 16-ந்தேதி பொறுப்பு ஏற்க உள்ளார். அவரின் தலைமையில் செய்யப்பட்ட தேர்தல் பிரசாரம் என்பதால், இரு மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் நோக்கியுள்ளனர். 

எதிர்பார்ப்பு

மற்றொருபுறம், ஆளும் பா.ஜனதா கட்சி 6-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டது. நட்சத்திர பிரசாரகாரர்களான பிரதமர் மோடி, பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு சொந்தமாநிலம் என்பதால் குஜராத் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

 

click me!