
தெலுங்கானா மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையயே நடைபெற்ற கடும் சண்டையில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தெகுலபள்ளி கிராமத்தில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.
கடும் சண்டை
இதனை தொடர்ந்து பாதுகாப்பு படைக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. நேற்று காலையில் நடைபெற்ற இந்த கடும் மோதலின் போது அந்த கிராமத்தில் 17 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
8 பேர் சுட்டுக்கொலை
இரு தரப்பினரிடையே நடைபெற்ற கடும் சண்டையில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் முக்கிய தீவிரவாதிகள் ஈசம் நரேஷ், சமாய் சஞ்சீவ், நரசிம்மா மற்றும் அமர் ஆகியோரும் அடங்குவர்.
மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீவிரவாதிகள் பழைய பீப்பிள்ஸ் வார் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. படுகொலை, பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இவர்கள் தேடப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீவிரவாதிகள் ஆந்திரா மற்றும் ஒடிசா எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இயங்கிவந்தனர். நளகொண்டா மாவட்டத்தை சேர்ந்த அவர்கள் தங்களது தீவிரவாத நடவடிக்கைகளை கம்மம்- வாராங்கல் மாவட்டங்களுக்கு மாற்றிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.