
பிரதமர் மோடியின் கைகளில் இருக்கும் பொம்மையாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் மாறிவிட்டது. தேர்தலில் மோடியின் பிரசாரக் கப்பல் மூழ்காமல் பாதுகாக்கும் பணியைச் செய்கிறது என்று காங்கிரஸ் கட்சி கடும் குற்றச்சாட்டு கூறியுள்ளது.
மோடி ஊர்வலம்
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் சபர்மதி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று பிரதமர் மோடி தனது வாக்கைப் பதிவு செய்தார். அங்கிருந்து வெளியே வந்த பிரதமர் மோடி, மக்களிடம் தனது வாக்களித்த விரலைக் காண்பித்து, தனது காரில் ஊர்வலமாகச் என்றார்.
குற்றச்சாட்டு
பிரதமர் மோடி மக்களிடம் கைகளைக் காட்டி ஊர்வலமாகச் சென்றது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகும் எனக் காங்கிரஸ் கட்சி கடும் குற்றச்சாட்டை முன்வைத்தது.
புகார்
மேலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் காங்கிரஸ் கட்சி புகார் அளித்து, பிரதமர் மோடி மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு ெசய்ய வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால், எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டெல்லியில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரம் என்பது மூழ்கும் கப்பலாக இருக்கிறது, ஆனால், தேர்தல் ஆணையம் அதை காப்பாற்ற முயல்கிறது. தேர்தல் ஆணையம் பா.ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தனித்தனியாக நிலைப்பாடு எடுக்கிறது. பா.ஜனதா கட்சியின் ஒரு அமைப்பு போல தேர்தல் ஆணையம் செயல்படுவதன் காரணம் என்ன?.
கை பொம்மை
பிரதமர் மோடி அப்பட்டமாக தேர்தல் விதிமுறைகளை மீறுகிறார். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. பிரதமர் மோடியின் கைகளில் இருக்கும் பொம்மை போல் தேர்தல் ஆணையம் இருக்கிறது.
அரசியல்சட்டத்தால் உருவாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளையும் பிரதமர் மோடி கைப்பாவையாக மாற்றி இருப்பது வெட்கக்கேடு. அதில் தேர்தல் ஆணையமும் ஒன்றாகும்.
வளர்ச்சி
குஜராத் தேர்தல் என்பது, புகைப்படங்களை வைத்தோ, கடல் விமானங்களை வைத்தோ, சாலையில் ஊர்வலமாகச் செல்வதை வைத்தோ நிர்ணயிக்கப்படுவதில்லை. வளர்ச்சியையும், மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்தும் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கப்படுகின்றன.
சார்பு தன்மை
தேர்தல் ஆணையம் சார்புத்தன்மையோடு நடந்து கொள்கிறது. காங்கிரஸ் துணைத்தலைவர்ராகுல் காந்தி தொலைக்காட்சியில் அளித்த பேட்டி தொடர்பாக பா.ஜனதா உறுப்பினர் கொடுத்த புகாருக்கு அடுத்த 30 நிமிடங்களில் நடவடிக்கை எடுத்து டி.வி ேசனல்கள் மீது எப்.ஐ.ஐர். பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்அனுப்பியது . அதே போன்ற நடவடிக்கையை மோடிக்கு எதிராக ஏன் எடுக்கவில்லை.
வெட்கக் கேடு
தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஏ.கே. ஜோதி, மோடி முதல்வராக இருந்தபோது, குஜராத் மாநிலத்தில் தலைமைச் செயலாளராக இருந்தவர். இன்னும் மோடிக்கு தலைமைச் செயலாளர் போல் ஏ.கே. ஜோதி நடந்து கொள்கிறார். இது தேர்தல் ஆணையத்துக்கு வெட்கக்கேடு.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.