
விடாது கருப்பு….இன்றும் பண பேர விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் குரல் எழுப்புவோம்…. ஆவேச ஸ்டாலின்…
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது குதிரை பேரம் நடைபெற்ற விவகாரத்தை இத்துடன் விட்டுவிடப்போவதில்லை என்றும், இன்று நடைபெறும் சட்டப் பேரவை கூட்டத்திலும் இந்த பிரச்சனையை எழுப்புவோம் என எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சசிகலா அணியினர் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள குதிரை பேரம் நடத்தியது தொடர்பாக மதுரை சரவணன் எம்எல்ஏ பேசிய வீடியோ காட்சி வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக நேற்று சட்டப் பேரவையில் திமுக வினர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினர், ஆனால் சபாநாயகர் இதற்கு அனுமதி அளிக்காததால், கடும் அமளி ஏற்பட்டது.
MLA FOR SALE என்ற பதாகைகளை ஏந்தி திமுகவினர் சட்டப் பேரவைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திமுக உறுப்பினர்கன் அனைவரும் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து ராஜாஜி சாலையில் ஸ்டாலின் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சில மணி நேரத்திற்குப் பிறகு, ஸ்டாலின் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். அப்போது செய்தியளார்களிடம் பேசிய ஸ்டாலின், குதிரை பேர பிரச்சனையை இத்துடன் விட்டு விடமாட்டோம் என தெரிவித்தார்.
இன்றும் சட்டப் பேரவைக்கு செல்வோம், மீண்டும் இது குறித்து பிரச்சனையை எழுப்புவோம் என தெரிவித்தார்.இப்பிரச்சனைக்கு உரிய விளக்கம் கிடைக்கும் வரை இதை விடப் போவதில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.