TN Local Body Election Result:மதச்சார்பற்ற கூட்டணிக்கு கிடைத்த வெற்றி.. மார்தட்டும் முத்தரசன்.

By Ezhilarasan BabuFirst Published Feb 22, 2022, 6:59 PM IST
Highlights

தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனவே என செய்தியாளர்கள் எழுபிய கேள்விக்கு பதில் அளித்த முத்தரசன், இதில் அதிமுக-பாஜக கூட ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது

இந்த வெற்றி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மினி சட்டமன்ற தேர்தலாகவே கருதப்படுகிறது. கட்சியின் உண்மையான பலத்தை உள்ளாட்சித் தேர்தல் மூலமே அறிய முடியும் என்பதாலும், அடிமட்ட அளவில் கட்சி எந்த அளவிற்கு பலமாக உள்ளது என்பதையும் இத் தேர்தல் மூலமே நிரூபித்துக்காட்ட முடியும் என்பதால் இது அதி முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது. இந்த தேர்தலில் பாமக, பாஜக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் என பல கட்சிகள் தனித்து சந்தித்தாலும், திமுக-அதிமுக விற்கு இடையே போட்டி நிலவியது. ஆனால் இன்று காலை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலிருந்தே திமுக முன்னிலை வகித்தது. 

தற்போது தமிழகம் முழுதும் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுகவே கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 138 நகராட்சிகளின் 134 நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது.  ஒரே ஒரு நகராட்சியில் அதிமுக முன்னிலையில் உள்ளது. மொத்தமுள்ள 489 பேரூராட்சிகளில் 437 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. அதில் வெறும் 16 பேரூராட்சிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது. இந்த வெற்றி வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது. திமுக எதிர்பார்த்ததை விட இமாலய வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது.  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள முதல்வர் முக ஸ்டாலின், 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாடு மக்களுக்கு இந்த வெற்றியை அற்பணிக்கிறேன். இந்த வெற்றியை கண்டு நான் கர்வம் கொள்ளவில்லை. மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் வந்துள்ளது. இந்த வெற்றிக்கு காரணம் திமுகவுடன் உள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான். எத்தனையோ சாதனைகளை செய்து கொண்டு இருக்கிறோம். இன்னும் செய்ய இருக்கிறோம். பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவதுதான் நமது கழகத்தின் லட்சியம் என்றார். இந்த வெற்றியை ஆடம்பரமாக கொண்டாடமல், அமைதியாக கொண்டாட வேண்டும். மக்களுக்காக நீங்கள் பாடுபட வேண்டும். ஏதாவது தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

சட்டமன்ற தேர்தல் பொறுத்தவரை வெற்றி பெற்ற பின்னர் உறுதி எடுத்து கொண்டோம் என்ற அவர், எங்களுக்கு வாக்களித்த மக்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். வாக்களிக்காத மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்று வருத்தப்படும் படி பணி இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்திளார்களிடம் பேசிய இக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்த வெற்றி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றார்.

தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனவே என செய்தியாளர்கள் எழுபிய கேள்விக்கு பதில் அளித்த முத்தரசன், இதில் அதிமுக-பாஜக கூட ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறாமல் இருந்தால் அவர்கள் எப்படி வெற்றி பெற்றிருக்க முடியும்? அப்படி அவர்கள் கூறி இருந்தால் அது தவறான கருத்து. வாக்களித்த மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த வெற்றிக்கு மிகப் பெரிய பங்களித்த முதல்வருக்கு நன்றி 
இவ்வாறு கூறினார். 
 

click me!