
இனி எதிர்க்கட்சி அதிமுக அல்ல தாங்கள் தான் என பாஜகவினர் கூறிவரும் நிலையில் சென்னையில் சில வார்டுகளில் அதிமுகவை அடித்து ஓரம்கட்டி பாஜக இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றியை நோக்கி திமுக சென்று கொண்டுள்ள நிலையில் பல இடங்களில் அதிமுகவை ஓரம்கட்டி பாஜக இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற முனைப்பில் பல ஆண்டுகளாக பாஜக செயல்பட்டு வருகிறது, எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் ஆட்சியை கைப்பற்றுவோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆருடம் பேசி வருகிறார். சட்டமன்றத்தை பொறுத்தவரையில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்கள் மன்றத்தில் இனி பாஜகதான் எதிர்க்கட்சி என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக ஒவ்வொரு விஷயத்திலும் அதிமுகவை காட்டிலும் திமுகவை எதிர்ப்பதில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது.
இதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்தாலும் தங்களுக்கென தனித்துவத்தை உருவாக்க முயற்சியில் பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் பாஜக அதிமுக தனித்தனியாக தேர்தலை சந்திக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆனாலும் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல்களில் இரு கட்சிகளுக்குமான கூட்டணி தொடரும் என அண்ணாமலை கூறிவருகிறார். இந்நிலையில்தான் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. அதில் பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. சென்னை, கோவை, சேலம், மதுரை என 21 மாநகராட்சிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் மொத்தம் 200 வார்டுகளில் 150க்கும் அதிகமான வார்டுகளை கைப்பற்றி சென்னை மேயர் பதவியை திமுக கைப்பற்றும் சூழல் உருவாகியுள்ளது.
அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்ரமணியன் போன்றோர் தீவிர களப்பணியாற்றி வந்த நிலையில் சென்னையில் மாபெரும் வெற்றியை நோக்கி திமுக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை திமுக 33 பாடுகளில் முன்னிலை பெற்றுள்ளது. அதில் மொத்தம் 15 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது, அதில் அதிமுக 1 வார்டில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 1 வார்டில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. மற்ற எந்த இடத்திலும் அதிமுக முன்னிலையில் இல்லை, ஆனால் பாஜக சென்னையில் 5 வார்டுகளில் அதிமுகவை அடித்து ஒரங்கட்டி 2வது இடம் பிடித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 174 வது வார்டில் திமுக வென்றுள்ளது, ஆனால் இங்கு இரண்டாவது இடத்தை பாஜகவே பிடித்துள்ளது, இங்கு அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதாவது 174 வது வார்டில் திமுக 6343 வாக்குகளும், பாஜக 1847 வாக்குகளையும், அதிமுக 1403 வாக்குகளைப் பெற்றுள்ளது. 4960 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராதிகா வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல் 54வது வார்டிலும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக 2வது இடம் பிடித்துள்ளது. திமுக வேட்பாளர் 3 ஆயிரத்து 570 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார், பாஜக வேட்பாளர் 1142 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார், ஆனால் அதிமுக வெறும் 818 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. கிட்டத்திட்ட அதிமுகவைவிட பாஜக 300 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது.
இதேபோல் சென்னையில் மேலும் 3 வார்டுகளில் பாஜக அதிமுகவை காட்டிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. என்னதான் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தபோதும் பாஜக அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு வளர்ந்துள்ளது. ஒருவேளை இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்திருந்தால் பல இடங்களில் பாஜக திமுகவுக்கு டஃப் கொடுத்திருக்க கூடும் என பாஜகவினரால் பேசப்பட்டு வருகிறது. எது எப்படி இருந்தாலும் பாஜக அதிமுக கூட்டணி திமுகவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க செய்துள்ளது என்றே கூறலாம்.