
தமிழகத்தில் காலூன்ற தற்போதைய அரசியல் நெருக்கடியை பா.ஜ.க. பயன்படுத்த விரும்புவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா.குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னையில் இன்று டி.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மோடி அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் மக்கள் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்திய வந்த போது பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படவில்லை."
"நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருக்கும் தமிழர்கள் பிரச்சனையில் இந்திய - இலங்கை அரசுகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். தமிழக மீனவர்களின் பிரச்சனையை தீர்க்க கச்சத்தீவு உடன்பாடு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று பா.ஜ.க. தலைமையிலான மோடி அரசு கடுமையாகவே ராஜா விமர்சித்திருந்தார். டெல்லியில் குடியிருப்பதால் என்னவோ முதலில் அங்கிருந்து கணக்கைத் தொடங்கிய அவர் பிறகு தமிழக அரசையும் ஒரு கை பார்த்தார்.
தமிழகத்தில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து பேசிய டி.ராஜா, "தமிழகம் அரசியல் நெருக்கடியில் இருப்பதாகவும், அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட பிளவால் அரசு நிர்வாகம் இயங்கவில்லை" என்றும் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மக்கள் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனையை அரசு கண்டுகொள்ளவில்லை என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் காலூன்ற தற்போதைய நெருக்கடி நிலையை பா.ஜ.க. பயன்படுத்த விரும்புவதாகவும் குற்றஞ்சாட்டினார்.