
தமிழகம் முழுவதும் ஆக்சிஜன், படுக்கைகள் தேவையைக் கண்காணிக்கவும் அத்தியாவசிய மருந்துகள் இருப்பினைக் கண்காணிக்கவும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் தற்போது பெருகி வரும் கரோனா வைரஸ் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் பெருநகர மாநகராட்சிப் பகுதிகளில் நோய்த்தொற்றைக் குறைக்கும் பொருட்டு மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் கள அளவிலான குழுக்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்துக் கண்காணிக்கப்படுகின்றன.
பொது சுகாதாரம் மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்தில் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையில் மாநில அளவில் மேற்கொள்ளப்படும் பெருந்தொற்று தடுப்புப் பணியில் 4 இந்திய ஆட்சிப்பணி பயிற்சி அலுவலர்களைச் சுழற்சி முறையில் பணியாற்ற ஆணை வெளியிடப்பட்டுள்ளது. கோவிட் கட்டுப்பாட்டு அறையில் ஏப்ரல் 29 முதல் மே 12 வரை பணிபுரிய கீழ்க்காணும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், அவர்களுக்கு நேராக குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை மருத்துவப் பணிகள் கழகத்துடன் இணைந்து பணிபுரிய ஆணையிடப்பட்டுள்ளது.
அனாமிகா ரமேஷ் ஐஏஎஸ்- பிராணவாயு தேவையைக் கண்காணித்தல்
கெளரவ் குமார் ஐஏஎஸ்- அத்தியாவசிய மருந்துகள் இருப்பினைக் கண்காணித்தல்
ஆர்.ஐஸ்வர்யா ஐஏஎஸ், கட்டா ரவி தேஜா ஐஏஎஸ்- மருத்துவமனைகள் படுக்கை இருப்பினைக் கண்காணித்தல் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளை காக்கும் ரெம்டெசிவிர் மருந்தை வாங்க மணிக்கணக்கில் மக்கள் கீழ்பாக்கத்தில் காத்து கிடக்கின்றனர். அதேபோல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது. உடனடியாக கிடைக்கப்பெற்ற இந்த தகவல்களின் அடிப்படையில் தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.