இன்று வெளியாகிறது அதிமுக வேட்பாளர் பட்டியல்?... மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆலோசனை...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 5, 2021, 10:56 AM IST
Highlights

ஓபிஎஸ்- இபிஎஸ் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்வது, சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் ஒதுக்குவது போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் என ஒருபுறமும், விருப்ப மனு தாக்கல், நேர்காணல், ஆலோசனை என மறுபுறமும் பிசியாக வேலை செய்து கொண்டு வருகின்றன. அதிமுகவில் கடந்த மார்ச் 3ம் தேதி விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்ததை அடுத்து, நேற்று தலைமை அலுவலகத்தில் விருப்ப ம்னு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. 

தேர்தலுக்கு குறைவான நாட்களே இருப்பதால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர் ஒரே நாளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் நேர்காணலை நடத்தி முடித்தனர். இந்நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஓபிஎஸ்- இபிஎஸ் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்வது, சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் ஒதுக்குவது போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதிமுக மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு ஆட்சிமன்ற குழு கூட்டமும் நடைபெறுகிறது. இதையடுத்து தமிழக சட்டசபை தேர்தலில் அ.திமு.க. சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகலாம் என கூறப்படுகிறது.

tags
click me!