யாராக இருந்தாலும் சேம் ட்ரீட்மென்ட் தான்..! இடதுசாரிகளுக்கு தலா 6 சீட்..! கதற விடும் திமுக தலைமை..!

By Selva KathirFirst Published Mar 5, 2021, 10:32 AM IST
Highlights

கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை நேரடியாகவும் பல முறை மறைமுகமாகவும் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவிலும் கூட இடதுசாரிக்கட்சிகளுக்கு தலா 6 சீட் என்பதில் இருந்து இறங்கி வர திமுக மறுத்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை நேரடியாகவும் பல முறை மறைமுகமாகவும் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவிலும் கூட இடதுசாரிக்கட்சிகளுக்கு தலா 6 சீட் என்பதில் இருந்து இறங்கி வர திமுக மறுத்து வருகிறது.

கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு திமுக கூட்டணியில் இடதுசாரிக்கட்சிகள் இடம்பெற்று இருந்தன. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இதனை சுட்டிக்காட்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதை விட 2 தொகுதிகள் கூடுதலாக வேண்டும் என்று பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது. ஆனால் திமுக சிறிதும் தயக்கம் இன்றி நான்கு தொகுதிகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று பேச்சுவார்த்தையை தொடர்ந்தது. இதனை கேட்டு அதிர்ச்சிக்கு உள்ளான இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆலோசித்து விட்டு வருகிறோம் என்று கூறிவிட்டு புறப்பட்டனர்.

இதன் பிறகு திரை மறைவில் இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றன. அதில் திமுக தரப்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் வரை தரத்தயார் என்றது. ஆனால் தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் பிடிவாதம் காட்டியது. சரி, 6 தொகுதிகளை பெற்றுக் கொள்ளுங்கள், எப்போது வேண்டுமானாலும் அறிவாலயம் வந்து கையெழுத்து போடுங்கள் என்று கூறிவிட்டு திமுக பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டது. இதன் பிறகு திமுகத ரப்பில் இருந்து எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.

இதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறை நேரடியாக பேச்சுவார்த் நடத்திய போதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் கூறிய அதே எண்ணிக்கையை தான் கூறியுள்ளனர் திமுக நிர்வாகிகள். இதனால் அதிருப்தி ஏற்பட்டே அந்த கட்சி பேச்சுவார்த்தையில் இருந்து எழுந்து வந்தது. அதன் பிறகு திரை மறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்றாலும், நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வரத் தயாராக இல்லை என்று மார்க்சிஸ்ட் கூறிவிட்டது. இதன் பிறகு அவர்களுக்கும் 6 தொகுதிகள் ஒதுக்குவதாக திமுக தரப்பு கூறியது. ஆனால் அதனை ஏற்க மார்க்சிஸ்ட் மறுத்துவிட்டது.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக கூட்டணியை தவிர தற்போது வேறு வாய்ப்பு இல்லை. எனவே அவர்கள் கொடுப்பதை ஏற்பதை தவிர வேறு வழியில்லை என்கிற முடிவிற்கு வந்துள்ளார்கள். இருந்தாலும் ஆறு தொகுதி என்பதை எட்டாக உயர்த்த முடியுமா? என பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது என்கிற முடிவுக்கும் வந்தார்கள். இதனை அடுத்து முத்தரசன் தலைமையில் மறுபடியும் அண்ணா அறிவாலயம் சென்ற நிலையில் 6 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வாய்ப்பில்லை என்று கைவிரித்துவிட்டார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சிபிஐ கட்சி கையை பிசைந்து கொண்டிருக்கிறது.

ஆனால் திருமாவளவன் 6 தொகுதிகளை ஏற்றுக் கொண்டதால் தங்களுக்கும் வேறு வழியில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளை ஏற்கும் மனநிலையில் இல்லை என்கிறார்கள். மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் 6ந் தேதி சென்னை வருமாறு அழைப்பு சென்றுள்ளது. அவர்களுடன் ஆலோசித்த பிறகே திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசி முடிவெடுக்கும் என்கிறார்கள். தேசிய கட்சியாக இருந்தாலும் சரி, மாநில கட்சியாக இருந்தாலும் சரி தாங்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலையில் திமுக நிர்வாகிகள் பேசி வருவதாக கூட்டணிக்குள் பதற்றத்துடன் பேசிக் கொள்கிறார்களாம்.

click me!