தமிழகத்தில் 50 பாஜக எம்.எல்.ஏ.க்கள்... தமிழக அரசியலை திணறடிக்க பாஜகவின் திட்டம்..!

By Asianet TamilFirst Published Nov 2, 2020, 9:29 PM IST
Highlights

அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 40 முதல் 50 தொகுதிகளில் வெற்றிப்பெறுவதை இலக்காக வைத்து செயல்படுவதாக தமிழக பாஜக  துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
 

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் பாணியில் அரசியல் செய்ய தொடங்கியிருக்கிறது பாஜக. தேர்தல் நெருங்கிவரும் வேளையில் அக்கட்சி பிஸியாகவே இருக்கிறது. பிரபலங்களை கட்சியில் இணைப்பது, மாற்றுக் கட்சியினரை கட்சியில் சேர்ப்பது, திமுகவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் விதவிதமாக பரபரப்பை உண்டாக்குவது, வேல் யாத்திரை என அக்கட்சி பரபரப்பாக மாறியிருக்கிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிடுவது என்றும் முனைப்பு காட்டி வருகிறது.


சட்டப்பேரவைத் தேர்தலில் 60 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது, 90 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சி பாஜகதான் என்று பாஜக தலைவர் பேசிவருகிறார். இதேபோல அதிமுகவுடன் கூட்டணி, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றெல்லாம் தமிழக பாஜகவினர் பேசிவருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் 40 முதல் 50 தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காக வைத்து செயல்படுவதாக பாஜக துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.


வேல் யாத்திரை தொடர்பாக மதுரையில் பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கருப்பு முருகானந்தம் பேசும்போது, “வேல் யாத்திரை நடக்கும்போது அறுபடை வீடுகளிலும் ஒரு லட்சம் பேர் கூட வேண்டும். இந்த யாத்திரையில் மாற்றுக் கட்சியினரையும் பங்கேற்க செய்ய வேண்டும். தமிழக மக்கள் பாஜகவை வரவேற்க தயாராகிவிட்டார்கள். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 40 முதல் 50 தொகுதிகளில் வெற்றிப்பெறுவதை இலக்காக வைத்து செயல்படுகிறோம். கூட்டணிக் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் பிரமிக்கும் வகையில் பாஜக கூட்டங்களில் கூட்டத்தைக் கூட்டி மாற்றத்தை ஏற்படுத்துவோம்.” என கருப்பு முருகானந்தம் பேசினார். 

click me!