
இலங்கை மக்களுக்கு உதவும் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுக்குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்கிறோம். இந்த தருணத்தில் சொல்லுதல் யார்க்கும் எளிய… என்ற திருக்குறளை நினைவு படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்க ஆபரேசன் கங்கா திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்திய போது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை அரசியல் லாபம் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டிருந்தது.
அதேபோன்ற செயலாக தற்போதைய தீர்மானமும் மாறிவிடக்கூடாது. இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், மாநிலத்தில் திமுக அரசும், இலங்கையில் நடைபெற்ற மனிதாபிமானமற்ற கொடுமைகளை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. ஆட்சியில் இருந்தும், அவர்கள் மீட்க எந்த ஒரு சிறு முயற்சியையும் எடுக்கவில்லை. முன்னர் இலங்கையில், உள்நாட்டுப் போர் நிறுத்தத்தினைக் கொண்டுவர திமுகவால் காட்சிப்படுத்தப்பட்ட 2 மணி நேர கடுமையான உண்ணாவிரதம் போல, இந்தத் தீர்மானமும், போர் நிறுத்தத்திற்காக திமுக கடுமையாக உழைத்தது என்ற ஒரு மாயக்கதையை உருவாக்கும் முயற்சியாக அமைந்துவிடக் கூடாதே.... என்ற சமூக அக்கறைதான் எங்கள் கவலை. மத்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் உதவிகள் பட்டியலை தமிழக முதலமைச்சருக்கு நாங்கள் எடுத்துச் சொல்ல விரும்புகிறோம். இந்தியா இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் நாணய பரிமாற்றத் தொகுப்பு உள்ளிட்ட நிதி உதவிகளை வழங்கியது. மேலும் இரண்டு கட்டங்களாக முதலில் 515 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆசிய க்ளியரிங் யூனியன் கடன்களை ஒத்திவைத்தல், பிறகு மீண்டும் 498.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒத்திவைத்தல் என கடன்கள் ஒத்திவைக்கப்பட்டது.
2022ம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை மக்களுக்கு இந்திய ஆதரவு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கி உள்ளது. 4 லட்சம் டன் எரிபொருள் 10 லட்சம் டன் சரக்குகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கூடுதலாக 1 பில்லியன் கடன் வசதியின் கீழ் சுமார் 40,000 டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, இலங்கையைப் பொறுத்தவரையில் சூழலுக்கு ஏற்ப இன்னமும் கூடுதல் உதவிகளை முன்னெடுக்க இந்தியா தயாராகவே இருக்கிறது என்பது வெளிப்படையான உண்மை. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழக மக்கள் சார்பில் வழங்கப்படும் உதவிகளை, நிலையான நெறிமுறைகளை பின்பற்றி வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்து, நேரடி அரசியல் செய்யாமல், இலங்கைக்கு சுமூகமாக உதவிகள் செல்வதை தமிழக அரசு உறுதி செய்யும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.