
மறைந்த நடிகர் விவேக்கின் வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் விவேக், மரம் வளர்பது, இயற்கையை பாதுகாப்பது போன்றவைகளில் அதீத ஆர்வம் கொண்டவர். மேலும் இவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மீது மிகுந்த பற்று கொண்டவர். இவர் தனது நகைச்சுவை மூலம் சமூக கருத்துக்களை பேசி மக்களை சிந்திக்க வைத்துள்ளார். மேலும் இவர் பல சமூகப் பணிகளையும் செய்திருக்கிறார்.
தமிழகம் முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்ததோடு, இளைஞர்கள் அதிகளவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தி வந்தார். தமிழ் திரையுலகில் சின்னக் கலைவாணர் என மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்த விவேக், கடந்த ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார். அவரது ஒரு வருட நினைவஞ்சலி சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி, தமிழக முதல்மைச்சர் மு.க.ஸ்டாலினை கடந்த வாரம் சந்தித்தார். தன் மகள் அமிர்தாநந்தினியுடன் வந்திருந்த அவர், முதல்வரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார். அதில் விருகம்பாக்கத்தில் நடிகர் விவேக் அவர்கள் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் அவரது கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை விரும்கம்பாக்கத்தில் ரமலான் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் அவரது இல்லம் அமைந்திருக்கும் சாலைக்கு, அவரது பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டலின் உடனடியாக விவேக்கின் பெயரை சூட்டுவது குறித்து அரசாணை வெளியிட உத்தரவிட்டார். மேலும் வருகிற மே 3 ஆம் தேதி அதன் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.