
16வது தமிழக சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் கூடியது. சட்டமன்றத்தில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், டி.எம்.காளியண்ணன், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்த கிருஷ்ணன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தன் நடிப்பாற்றலால் நகைச்சுவை மட்டுமல்லாது விழிப்புணர்வையும் ஏற்படுத்தியவர், அவரின் இழப்பு திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு நடிகர் விவேக்கிற்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார். மேலும் 13 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, சபாநாயகர், துணை சபாநாயகர் இல்லாத நேரத்தில் சட்டப்பேரவையை நடத்த உள்ள மாற்றுத் தலைவர்களை சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதன் படி சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், ராமகிருஷ்ணன், உதயசூரியன், எஸ்.ஆர்.ராஜா, டிஆர்பி ராஜா ஆகியோரை சட்டப்பேரவையின் மாற்றுத்தலைவர்களாக அறிவிக்கப்பட்டனர்.