அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகளுக்கு ஒகே சொன்ன தமாகா... இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவும் சம்மதம்.!

By Asianet TamilFirst Published Mar 11, 2021, 9:33 PM IST
Highlights

அதிமுக கூட்டணியில் இழுபறியில் இருந்த வந்த தமாகாவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 

அதிமுக கூட்டணியில் தமாகா 12 தொகுதிகளைக் கேட்டு வந்தது. கட்சியின் சைக்கிள் சின்னத்தை மீட்கும் வகையில் 12 தொகுதிகளை ஜி.கே. வாசன் எதிர்பார்த்தார். ஆனால், 6 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என்று அதிமுக மறுத்துவிட்டது. ஆனால், கவுரவமான தொகுதிகளை அதிமுக ஒதுக்க வேண்டும் என ஜி.கே. வாசன்  தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் அதிமுக ஒதுக்க முன்வந்த 6 தொகுதிகளை ஏற்றுக்கொண்டுள்ளார் ஜி.கே.வாசன்.
இதுதொடர்பாக ஜி.கே.வாசன் கூறுகையில், “அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகள் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தலில் திரு.வி.க நகர், பட்டுக்கோட்டை, லால்குடி, ஈரோடு கிழக்கு, தூத்துக்குடி, கிள்ளியூர் ஆகிய 6 தொகுதிகளில் தமாகா போட்டியிடுகிறது. எங்கள் கட்சியின் சைக்கிள் சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறோம். விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.
அதிமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் லால்குடி தொகுதியில் வேட்பாளராக ராஜராம் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்தத் தொகுதி தற்போது தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!