
நவோதயா பள்ளிகளை எதிர்ப்பவர்கள் ஏழைகளின் நலனுக்கு எதிரானவர்கள் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளியான நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் மட்டும் இல்லை. மத்திய அரசுப் பள்ளியான நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அமைக்க மாநில அரசு அனுமதி அளிக்கக்கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை மாவட்டந்தோறும் நவோதயா பள்ளிகளை அமைக்க இடம் வழங்க வேண்டும் என்றும் அதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்குமாறும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைக்க திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. இந்தி திணிப்பு என்பதை காரணமாக காட்டி நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அமைக்க திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
நவோதயா பள்ளிகளை கடுமையாக எதிர்த்துவரும் ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 50 ஆண்டுகளாக தமிழகத்திற்கும் தமிழக மாணவர்களுக்கும் துரோகம் செய்தவர்கள்தான் திராவிடக் கட்சிகள் என விமர்சனம் செய்தார்.
நவோதயா பள்ளிகளை எதிர்ப்பவர்கள், ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானவர்கள் எனவும் தமிழக மாணவர்களிடையே இந்தியை யாராலும் திணிக்க முடியாது எனவும் தெரிவித்த அவர், அதேநேரத்தில் இந்தியை தானாக முன்வந்து கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும் தெரிவித்தார்.