
தூத்துக்குடி கலவரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று விசாரணையைத் துவக்கினார். மூன்று கட்டமாக விசாரணை நடத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. போராட்டக்காரர்களை கலைக்க எவ்வளவோ யுக்திகள் இருந்தும், தேச விரோதிகளை சுடுவது போன்று சரமாரியாக சுட்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி கலவரம், துப்பாக்கி சூடு தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம்
அமைக்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் கமிஷன் இன்று விசாரணையை துவங்குகிறது.
தூத்துக்குடியில் கடந்த 22 ஆம் தேதி மற்றும் 23 ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 13 பேர் பலியாயினர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்துள்ளது. இந்த ஒரு நபர் கமிஷன் இன்று முதல் விசாரணை தொடங்குகிறது.
கமிஷனின் விசாரணை அதிகாரி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று தூத்துக்குடி வருகிறார். அவர் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில்
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்துக்குப் பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறி்த்து 3 கட்டமாக விசாரணை நடத்த உள்ளதாக கூறினார். தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் பிரமாணப்பத்திரம் மூலம் வாக்குமூலம் அளிக்கலாம், தூத்துக்குடியில் உள்ள விசாரணை அலுவலகத்தில் பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்யலாம் என்றார். தூத்துக்குடி பழைய சுற்றுலா மாளிகையில் விசாரணை ஆணையம் செயல்படும். வாக்குமூலம் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை ஜூன் 22 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். காலம் தவறினால் 30 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படும் என்றார்.
துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் ஆஜராக இயலாத பட்சத்தில் மாற்று ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறினார். மேலும் பேசிய அவர் துப்பாக்கி சூடு குறித்து கைவசம் வீடியோக்கள் இருந்தால் ஒரு வாரத்திற்குள் அளிக்கலாம். எடிட் செய்யாத வீடியோக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் கூறினார்.
முதற்கட்டமாக மக்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தப்படும். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபர்களும் விசாரணை செய்யப்படுவார்கள். சிகிச்சை பெறுபவர்களை சந்திக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படும். இரண்டாவது கட்டமாக ஊடகவியலாளர்கள் தங்கள் வாக்கு மூலங்களை தெரிவிக்கலாம். நேரில் சம்பவங்களை பார்த்து வீடியோ எடுத்தவர்கள் அதை அளிக்கலாம். மூன்றாவது கட்டமாக காவல் துறையிடம் விசாரணை நடத்தப்படும். உயரதிகாரிகள் உட்பட காவல் துறையினரும் விசாரணை செய்யப்படுவார்கள் என்றார். விசாரணை ஆணையத்தில் தெரிவிக்கும் தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்றார். நாளை ஆட்சியர் அலுவலகம் ஸ்டெர்லைட் குடியிருப்பில் விசாரணை நடத்த உள்ளதாகவும் அருணா ஜெகதீசன் குறிப்பிட்டுள்ளார்.