சிறையில் சாத்தான்குளம் வியாபாரிகள் மர்ம மரணம்... கே.எஸ்.அழகிரி அறிக்கையால் ஜாதி மோதல் பதற்றம்..!

By Selva KathirFirst Published Jun 24, 2020, 9:48 AM IST
Highlights

கோவில்பட்டி கிளைச் சிறையில் வியாபாரிகளான தந்தை மற்றும் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அதற்கு கண்டனம் தெரிவிப்பதற்காக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை சர்ச்சையாகியுள்ளது.

கோவில்பட்டி கிளைச் சிறையில் வியாபாரிகளான தந்தை மற்றும் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அதற்கு கண்டனம் தெரிவிப்பதற்காக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பாக அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பொது ஊரடங்கு அமலில் இல்லாத தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சாத்தன்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் மொபைல் கடை மூலம் தொழில் செய்து வருகிற ஜெயராஜ் நாடாரை காவல்துறை துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கடையை திறந்து வைத்ததற்காக கடந்த 19-ம் தேதி, மாலை 7 மணிக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று இருக்கிறார்.

இதுகுறித்து, கேள்விப்பட்ட அவரது மகன் பெனிக்ஸ் இம்மானுவேல் நாடார் காவல்நிலையத்திற்கு சென்று எவ்வித குற்றமும் இழைக்காத தனது தந்தையை காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் இருவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியது நியாயமா என்று கேட்டு இருக்கிறார். அதைத் தொடர்ந்து, அவரது மகனையும் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். பிறகு அவர்கள் இருவரையும் காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்று கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அதன்பிறகு, அங்கேயும் நள்ளிரவு 1.30 மணி வரை கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதால் ஜெயராஜ் நாடார் நேற்று (ஜூன் 22) அன்று இரவு இறந்துவிட்டார்.

தந்தையுடன் கடுமையாக தாக்கப்பட்ட பெனிக்ஸ் நாடார் இன்று (ஜூன் 23) காலை 8 மணிக்கு இறந்துவிட்டார். அந்தப் பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மரணங்கள் குறித்து, இதற்கு நீதி கேட்கிற வகையில் சாத்தன்குளம் பகுதியில் திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் கடையடைப்பு நடத்தி மறியல் போராட்டம் செய்து வருகின்றனர். கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்து வைக்கப்பட்ட தந்தையையும், மகனையும் கடுமையாக தாக்கி கொலை செய்ததாக கூறி, மறைந்த ஜெயராஜ் நாடாரின் மனைவி செல்வராணி காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் அனுப்பியிருக்கிறார்.

எந்த தவறையும் செய்யாத நிரபராதிகள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் படுகொலைக்கு காவல்துறை தான் முழு பொறுப்பாகும். காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு உடனடியாக கைது செய்யப்படவேண்டும். ஜெயராஜ் நாடார், பெனிக்ஸ் இம்மானுவேல் நாடார் ஆகியோர் காவல்துறையினரால் அடைத்து வைக்கப்பட்ட போது கடுமையாக தாக்குதலின் காரணமாக இறந்திருப்பதனால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த வழக்கை மாநில காவல்துறை விசாரித்தால் நிச்சயம் நீதி கிடைக்காது. எனவே, காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இந்த வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுபோன்ற மர்ம மரணங்கள் தொடர்பான விவகாரங்களில் தலைவர்கள் அறிக்கை வெளியிடுவது இயல்பான ஒன்று தான். ஆனால் வியாபாரிகள் இருவர் பெயருக்கு பின்னால் அவர்கள் ஜாதியை குறிப்பிட்டு அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை சர்ச்சையாகியுள்ளது.

ஏனென்றால் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோரை தாக்கியதாக கூறப்படும் காவல் உதவி ஆய்வாளர்களில் ஒருவர் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர். ஏற்கனவே இதனால் சாத்தான்குளம் பகுதியில் ஜாதி ரீதியிலான டென்சன் உருவாகியுள்ள நிலையில் அழகிரியும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் வியாபாரிகள் ஜாதியை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்பட்டுள்ளது.

click me!