
ஓராண்டுக்கும் மேலாக ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அப்பல்லோ மருத்துவர்கள் , செவிலியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் சாட்சிகள் என 154 பேரிடம் விசாரணை நடத்தியது. மருத்துவர்களை விசாரிக்கும்போது மருத்துவ குழு வல்லுனர்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை தொடர முடியாமல் போனது. பின்னர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 7ம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணையை தொடங்கியது.
பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மருத்துவர் சந்தீப் சேத் தலைமையில் 6 பேர் அடங்கிய குழுவை எய்ம்ஸ் மருத்துவமனை நியமித்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஏற்கனவே 90% முடிவடைந்துவிட்ட நிலையில், அடுத்தக்கட்ட விசாரணைக்காக சசிகலா தரப்பு மற்றும் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் ஆணையத்திற்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கினர். பின்னர் மார்ச் 21ம் தேதி நேரில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
தொடர்ந்து அப்பல்லோ மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர் புகழேந்தி நேரில் ஆஜராகி விளக்கமளித்த நிலையில் விசாரணை நிறைவு பெற்றதாக ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அப்பல்லோ தரப்பு, சசிகலா தரப்பு, ஓபிஎஸ் தரப்பு மற்றும் சாட்சிகள் என இதுவரை 159 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. ஜூன் 24 ஆம் தேதி வரை ஆறுமுகசாமி ஆணையத்திற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னதாகவே விசாரணை நிறைவுபெற்றிருக்கிறது.
இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி. அப்போது பேசிய அவர், 'இரண்டு அணிகளாக பிரிந்திருந்த பன்னிர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி, இணைந்த பிறகு ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என இந்த ஆணையத்தினை அமைத்தார்கள். ஒபிஎஸ் க்கு 8 முறை சம்மன் அனுப்பட்டது.
அதன் பின்னர் ஆஜராகி விசாரணையின் போது தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியவர், ஒரே ஒரு விஷயம் மட்டும் சொன்னார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை உயர் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்ல வேண்டும் என்ற போது அதற்கு அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்று கூறியிருந்தார். வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதற்கு ஜெயலலிதாவிடம் பணம் இல்லையா?, தங்களுக்கு என்ன என்று எல்லோரும் இருந்தார்கள் அதனால் தான் ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து செல்லவில்லை.
வெளிநாடு சென்று சிகிச்சை அளிக்கதால் தான் ஜெயலலிதா இறந்தார். டிசம்பர் 4 ஆம் தேதி ஜெயலலிதா இறந்தார் என்று நான் கருதுகிறேன். அதன் பிறகு 5 ஆம் தேதி தான் அறிவித்தார்கள்.மேலும், அப்போது அதிமுக தலைமை நிலைய செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமல் கைரேகை வைக்கவோ, கையெழுதிடவோ முடியாது. அப்படியானால் காவேரி நதிநீர் தொடர்பான கூட்டம் உள்ளிட்டவை குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும்’ என்று கூறினார்.