
கோவை மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டதில் இருந்தே அங்கு ஏதாவது ஒரு பிரச்சினைகள் நடந்து கொண்டே இருக்கின்றது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி;- திமுகவின் 9 மாத ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. குற்றவாளிகளுக்கு முதல்வரே துணை போவது, வேடிக்கையாக உள்ளது. அதிமுகவைப் பொறுத்தரை சட்ட ரீதியாக எதையும் சந்திக்கத் தயார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை. குற்றவாளிகளை சட்ட ரீதியாகப் பிடித்து, ஒப்படைத்ததற்கு முதல்வர் கொடுத்த பரிசு இது.
தற்போது வந்துள்ள செய்தி, மாவட்ட ஆட்சியர்களுக்கும், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கும் வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக தற்போது செய்தி வந்துள்ளது. அதில், வாக்கு எண்ணிக்கை நாளன்று, அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால், அவர்களை தோல்வியுற்றதாக அறிவிக்க வேண்டும் என்று வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர்களும் அதனை செயல்படுத்த வேண்டும் என்றும் வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நகர்ப்புற தேர்தலுக்கு என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி நடந்து கொள்ள வேண்டும். ஒருவேளை ஆட்சியாளர்களின் கட்டளைக்கு இணங்க, தவறாக நடந்து கொண்டால், சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள நிலை ஏற்படும். அரசுக்கு உடந்தையாக இருந்துவிடக்கூடாது. ஜனநாயக முறைப்படி கடமையை ஆற்ற வேண்டும். தேர்தல் எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தவறு செய்தால், நீதிமன்றத்தை நாடுவோம், தண்டனை பெற்றுத் தருவோம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, நல்லவர் போல, நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அவர் கோவை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது முதல் தற்போது வரை, கோவையில் ஏதாவது ஒரு பிரச்சினைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. கோவை மாவட்டம் அமைதியானது. அங்கே ரவுடிகள், குண்டர்களை இறக்கி, சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க அவர் செயல்பட்டார். இந்த தேர்தலில் அது பிரதிபலித்தது. செந்தில் பாலாஜி, தேர்தல் விதிமுறைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். என்னென்ன தவறு செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் அவர் செய்துவிட்டார் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.