
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சென்னை ராயபுரத்தில் 49வது வார்டில் திமுகவினர் சிலர் அத்துமீறி வாக்குச் சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக தரப்பில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனிடையே கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகி ஒருவரை அதிமுகவினர் மடக்கி பிடித்தனர். ஜெயக்குமார் முன்னிலையிலேயே அவரை சிலர் தாக்க தொடங்கினர். அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம் என்றும் அவரது கையை கட்டும்படியும் கூறி ஜெயக்குமார் தடுத்தார். பின்னர், அந்த நபரிடம் சட்டையை கழட்டும்படி கடுமையாக ஜெயக்குமார் கூறினார். இதை தொடர்ந்து, அந்த நபரின் சட்டை கழற்றப்பட்டு அவரது கைகளும் கட்டப்பட்டன. பின்னர், சட்டை இல்லாமல், அவர் அரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராயபுரம் போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல், கலகம் செய்ய தூண்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதனிடையே, ஜெயக்குமார் வீட்டில் இருந்து கைது செய்யப்படும் போது, எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், 30க்கும் மேற்பட்ட போலீசார் அவரது வீட்டில் குவிந்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அவரை காவல் நிலையத்திற்கு வரும் படி பணிவாக அழைக்கின்றனர். அவரது மனைவி குறுக்கிட்டு போலீசாரை அழைத்துச் செல்ல விடாமல் தடுத்து கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார். போலீசாரும் அவருக்கு நிதானமாக பதிலளித்து அவரை அழைத்துச் செல்வதும், ஜெயக்குமார் மீது எந்த பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது என போலீசார் படித்து காட்டினர்.
"
இதனையடுத்து, நள்ளிரவு 12 மணியளவில் சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளி கிருஷ்ணன் முன்னிலையில் ஜெயக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார்.ஜெயக்குமாரை மார்ச் 7-ம் தேதி வரை (15 நாள்) நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.