இது அதிமுக, பாஜக கூட்டணியின் ட்ராமா..!! அக்குவேறு ஆணிவேறாக பிரித்த முத்தரசன்..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 21, 2020, 3:15 PM IST
Highlights

சமூக, பொருளாதார நெருக்கடிகள், கொரானா நோய் தொற்று பரவல் காரணமாக மேலும் ஆழப்பட்டு வருவதை மக்கள் கவனத்தில் இருந்து திசை திருப்பும் நோக்கத்துடன் இந்த‘லாவணி’கச்சேரி நடந்து வருகிறது.
 

தமிழகத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அஇஅதிமுக, பாஜக கூட்டாளிகள் செய்து வரும் அரசியல் சூழ்ச்சிகளை விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் சார்பில்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம்:- 

அஇஅதிமுக அமைச்சர்கள், அடுத்து வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார்  என்பது பற்றியும், ஒன்றுக்கும் மேற்பட்ட தலைநகர் அமைப்பது குறித்தும் ‘சர்ச்சையை‘ கிளப்பி, காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.ஆட்சி அதிகராத்தில் இருக்கும் அஇஅதிமுகவை பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில்  பாஜக முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் இந்த விவாதத்தில் பங்கேற்று வருகிறார். கொரானா நோய் பெருந்தொற்றுப் பரவல் தடுப்பு, விநாயாகர் சதுர்த்தி விழாவிற்கு பொருந்தாது என கொந்தளித்த பாஜக செயலாளர் எச்.ராஜா “கர்நாடகம் அனுமதி வழங்கியுள்ள ஆண்மையுள்ள அரசு” என சுட்டுரையில் பதிவிட்டு, புது சர்ச்சைக்கு ‘பிள்ளையார்சுழி‘போட்டுள்ளார். 

இப்படி பொருளற்ற வாதங்களை ஊதிப் பெருக்குவது எதற்காக? மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடித்து வரும் நவ தாராளமயக் கொள்கைகளால், நிலவி வந்த சமூக, பொருளாதார நெருக்கடிகள், கொரானா நோய் தொற்று பரவல் காரணமாக மேலும் ஆழப்பட்டு வருவதை மக்கள் கவனத்தில் இருந்து திசை திருப்பும் நோக்கத்துடன் இந்த‘லாவணி’கச்சேரி நடந்து வருகிறது. ஆளும் கட்சியின் அமைச்சர்கள், தங்கள் அமைச்சரவையில்,  கருத்துக்களை முன்வைத்து, கூடுதல் தலைநகர் குறித்த கருத்தை அரசின் அதிகாரப்பூர்வமாக முன்மொழிவாக வெளியிடும் வாய்ப்பு இருக்கும் போது, ஆளுக்கொரு திசையில், வெவ்வேறு கருத்துக்களை  ஊடகங்களில் முன் வைப்பது எதற்காக என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டுள்ள தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களை மீண்டும் இயக்குவதற்கு அரசு நிதி உதவி செய்ய வேண்டும். 

விளைந்த பொருள்களை சந்தைப்படுத்த முடியாமல் நஷ்டமடைந்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
வேலையில்லாதோர் வேதனை தணிக்க, வேலை இழந்துள்ளோருக்கு மறுவாழ்வளிக்க, குறைந்தபட்சம் 6 மாத காலங்களுக்காவது குடும்பத்துக்கு தலா ரூபாய்  7 ஆயிரத்து 500 நேரடி பண உதவி வழங்க வேண்டும்.கொரானா நோய் தொற்றில் பாதிக்கப்பட்டோருக்கு, அரசின் செலவில் வைத்தியம் பார்க்க வேண்டும். பரிசோதனை கூடங்களை அதிகப்படுத்தி, அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். இட ஒதுக்கீடு வழங்கும் முறையில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் திட்டத்தை தடுக்க வேண்டும் என்பது போன்ற மக்கள் வாழ்வில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் உண்மைப் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் அஇஅதிமுக, பாஜக கூட்டாளிகள் செய்து வரும் அரசியல் சூழ்ச்சிகளை விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக மக்கள் அனைவரையும்  கேட்டுக் கொள்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!