முதலமைச்சர் வேட்பாளர்..! கண்டுகொள்ளாத டெல்லி..! ரூட்டை மாற்றும் எடப்பாடியார்! பரபரக்கும் அதிமுக!

By Selva KathirFirst Published Aug 21, 2020, 1:29 PM IST
Highlights

முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் டெல்லியில் இருந்து தனக்கு உதவி கிடைக்கும் என காத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு

ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதை தொடர்ந்து புது ரூட்டில் பயணிக்கத் தொடங்கியுள்ளார்.
 

முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் டெல்லியில் இருந்து தனக்கு உதவி கிடைக்கும் என காத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதை தொடர்ந்து புது ரூட்டில் பயணிக்கத் தொடங்கியுள்ளார். சட்டமன்ற தேர்தல்நெருங்க நெருங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேம்ப் வேலைகளை தீவிரமாக்கிக் கொண்டேஇருக்கிறது. ஆனால் தேர்தலில் எடப்பாடியாரை முன்னிலைப்படுத்த முடியாத தர்மசங்கடமான நிலையில்அவரது டீம் விழி பிதுங்கியுள்ளது. \

சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடியாரை முன்னிலைப்படுத்த அனைத்து ஏற்பாடுகள் இரண்டு மாதங்களுக்கு முன்னரே தயாராகிவிட்டது. ஆனால் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ் போட்டுள்ள முட்டுக்கட்டையால் எடப்பாடி தரப்பு தங்கள் பணிகளை திரைமறைவில் மட்டுமே மேற்கொள்ள முடிகிறது. வெளிப்படையாக பிரச்சாரத்தை முன்வைக்காமல் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியாரை வெற்றி பெற வைக்க முடியாது என்று சுனில் டீம் தினமும் நெருக்கடி கொடுக்க, அதற்கான சூழலை உருவாக்க எடப்பாடி பழனிசாமி மற்றும்அவரது ஆதரவு அமைச்சர்கள் பெரும்பாடு பட்டு வருகின்றனர். 

டெல்லி ஆதரவு இருக்கிறது என்கிற காரணத்தால் தான் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தாமல் ஓபிஎஸ் பிரச்சனை செய்வது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது. எனவே டெல்லி சென்று அங்குள்ள சிலரை சமாதானம் செய்துவிட்டால் ஓபிஎஸ்சை ஆஃப் செய்துவிடலாம் என்பது தான் எடப்பாடி பழனிசாமி தரப்பின் கணக்கு. இதற்காக கடந்த சனிக்கிழமை முதலே டெல்லியில் உள்ளவர்களுடன் எடப்பாடி தரப்பு தொடர்பில் உள்ளது. இரவு பகலாக டெல்லியில்உள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அனால் இதுநாள் வரை டெல்லியில் இருந்து

தமிழக அதிமுக நிலவரத்தை கவனித்து வந்தவர்கள் யாருமே எடப்பாடி தரப்புக்கு பிடி கொடுக்கவில்லை என்கிறார்கள். ஒருவரிடம் பேசினால் மற்றொருவரை கை காட்டுவதாகவும் அவரை பிடித்தால் மீண்டும் பழைய நபரிடமே பேசுமாறு கூறுவதாகவும் சொல்கிறார்கள். இதனால் வழக்கம் போல் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை டெல்லி தரப்பு ஏற்காது என்பதை வழக்கமாக இதுபோன்ற விஷயங்களில் காய் நகர்த்தும் அமைச்சர்கள் இருவரும் புரிந்து கொண்டனர். எனவே டெல்லி சென்று அங்குள்ள பெருந்தலை ஒன்றை சந்தித்து பேசினால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று அந்த அமைச்சர்கள் இருவரும் எடப்பாடியாரிடம் கூறியுள்ளனர். அதற்கு தான் தற்போது நேரில் டெல்லி சென்றால் சரியாக இருக்காது என்று எடப்பாடியார் தயங்கியதாக சொல்கிறார்கள்.

இதனை அடுத்தே அமைச்சர்கள் இரண்டு பேர் டெல்லி செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காக விமான டிக்கெட்டுகளும் எடுக்கப்பட்டன. ஆனால் கடைசி நேரத்தில் டெல்லி செல்லும் திட்டத்தை அமைச்சர்கள் இருவரும் கைவிட்டனர். இதன் பின்னணியில் அவர்கள் இருவருக்கும் டெல்லியில் இருந்து வழக்கமாக கொடுக்கப்படும் சமிக்ஞை கிடைக்காதது தான் என்கிறார்கள். நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் டெல்லியில் இருந்து எடப்பாடியார் எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை.

இதனால் இன்னமும் டெல்லியை நம்பினால் பலன் இல்லை என்கிற முடிவுக்கு எடப்பாடியார் தரப்பு வந்துவிட்டதாக சொல்கிறார்கள். எனவே கட்சியில் தனக்கான ஆதரவை வலுப்படுத்தி ஓபிஎஸ்சுடன் நேரடியாக மோதுவது என்கிற முடிவுக்கு அவர் வந்துள்ளதாக சொல்கிறார்கள். இந்த விஷயத்தை வைத்து ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவை உடைக்க நினைத்தால் எப்படி எதிர்கொள்வது என்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடைபெற்றதாகவும் சொல்கிறார்கள்.

எனவே அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் ஜெயலலிதா பாணியில் எடப்பாடியார் அதிரடி நடவடிக்கையை எந்த நேரத்திலும் அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இல்லை என்றால் பொதுக்குழுவை கூட்டி இந்த விஷயம் தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள். குறைந்தபட்சம் மாவட்டச் செயலாளர்கள்கூட்டத்தைகூட்டியாவது தனது ஆதரவாளர்களின் எண்ணிக்கையை பொதுவெளியில் தெரியப்படுத்தினால் கூட போதும் என்கிற முடிவுக்கு எடப்பாடி தரப்பு வந்துள்ளதாக சொல்கிறார்கள்.

click me!