நியாயமான தீர்ப்பு ...இனி தாண்டா ஆட்டம் இருக்கு ...!!அட்ராசிட்டி ஃபார்முக்கு வந்த ஜெ .தீபா

By Ezhilarasan BabuFirst Published Nov 25, 2021, 12:13 PM IST
Highlights

ஆனால் அரசியல் ரீதியாக எங்களுக்கு எதிர்ப்புகள் அதிகமாக இருந்தது. அதிமுக கட்சி ரீதியாக எங்களுக்கு அதிக எதிர்ப்புகள் வந்தது. தற்போது தீர்ப்பு வந்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்க இருக்கிறேன் என கூறினார்.

வேதா இல்லத்தை வாரிசுதாரர்களான தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சாதகமான தீர்ப்பு அல்ல இது நியாயமான தீர்ப்பு என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா தெரிவித்துள்ளார். அதிமுகவினர் கூறுவதுபோல அந்த இல்லம் ஒரு கோவில் தான், ஆனால் அப்படிச் சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறதே தவிர அது அவர்களின் உடமை அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற கட்சியை உருவாக்கி அரசியலில் குதித்தார் ஜெ வின் அண்ணன் மகள் ஜெ. தீபா,அச்சு அசல் ஜெயலலிதாவை போலவே இருக்கிறார், அவரது பேச்சும் உடல் மொழியும் அவரைப்போலவே இருக்கிறது  அவர்தான் அம்மாவின் அடுத்த அரசியல் வாரிசு என ஏராளமானோர் அவருக்கு பின்னால் அணிவகுத்தனர். ஆனால் அமைப்பு தொடங்கிய சில நாட்களிலேயே அவர் பின்னடைவை சந்தித்தார். அதைத்தொடர்ந்து ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது, தன்னை நம்பி வந்த தொண்டர்களை மதிப்பதில்லை, எதேச்சதிகாரமாக நடந்துகொள்கிறார், காரணமே இல்லாமல் சந்தா வசூல் செய்வதில் குறியாக இருக்கிறார் என அவருக்கு எதிராக அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. தனிப்பட்ட முறையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை, அது காவல் நிலையம்வரை கொண்டுவந்து தனது மொத்த இமேஜையும் டேமேஸ் செய்துகொண்டார் ஜெ தீபா.

ஒருகட்டத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்,  அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், என்னுடைய உடல் நிலையின் காரணமாக அரசியலில் இருந்து விலகுகிறேன். நான் எதிர்பார்த்த சூழல் இப்போது இல்லை, இனிமேல் நான் அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை, கட்டாயப்படுத்தி அரசியலுக்கு  வரவழைக்கப்பட்டேன், வீட்னு முன்பு திரண்ட மக்கள் கூட்டம் தான் நான் அரசியலுக்கு வர காரணம். நான் சொத்துக்கு ஆசைப்பட வில்லை, சொத்து வேண்டும் என்றால் அப்போதே அவரிடம் கேட்டிருப்பேன். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி  அவசர அவசரமாக  ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் தோட்ட வேதா இல்லத்தை அரசுடமையாக்க கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றினார். அரசியல் தான் வேண்டாம் என்று சொன்னேன், ஜெவின் சொத்தும் வேண்டாம் என்றா சொன்னேன், வேதா இல்லத்தை அரசுடைமையாக்குவதே கூடாது, அதற்கு வாரிசு நாங்கள் இருக்கிறோம் என்றும், வேதா நிலையத்திற்கு வெறும் 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு  தொடர்ந்தார் அவர்.

இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி சேஷசாயி விசாரித்தார், அப்போது தீபா மற்றும் தீபக் தரப்பில் தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும், வேத நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்தது சட்டப்படி செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், நினைவிடமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டது, வீட்டிற்கு வெறும் 62 கோடியே 90 லட்சம் ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்து அந்தத் தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் அதிகாரிகள் செலுத்தியது தவறு எனவும் தீபா, தீபக் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஜெயலலிதா வாழ்ந்த இடத்தை புனிதமாகக் கருதி முறையாக பராமரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், தங்களின் கருத்துக்களை கேட்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், முறையாக மதிப்பீடு செய்யாமல் 68 கோடி ரூபாய் என இழப்பீடு வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

ஆனால் தமிழக அரசு வேதா நிலையத்தை கையகப்படுத்தும் முன்பே அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டதாகவும், பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஜெயலிதா வாழ்ந்த நிலத்தை அரசு கையகப்படுத்தி நினைவிடமாக மாற்ற நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தது. மறைந்த செல்வி ஜெயலலிதா அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட விதத்திலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட போது தீபா, தீபக் ஆகியோர் அவருக்கு உறுதுணையாக இல்லை எனவும்,  ஒருவர் குடியிருந்த வீட்டை நினைவிடமாக மாற்ற சுற்றுச்சூழல் சான்றிதழ் எதுவும் தேவை இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி சேஷசாயி மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக அறிவிக்கும் வகையில் அரசுடமையாக்க பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை செல்லாது என தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார். இது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெ.தீபா இந்த தீர்ப்பு எங்களுக்கு சாதகமான தீர்ப்பு அல்ல, இது நியாயமான தீர்ப்பு, நியாயப்படி, தர்மப்படி, சட்டப்படி இந்த தீர்ப்பைதான் நாங்கள் எதிர்பார்த்தோம். இந்த தீர்ப்பில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சட்ட ரீதியாக எங்களுக்கு எந்த பெரிய சிரமமும் இல்லை.

ஆனால் அரசியல் ரீதியாக எங்களுக்கு எதிர்ப்புகள் அதிகமாக இருந்தது. அதிமுக கட்சி ரீதியாக எங்களுக்கு அதிக எதிர்ப்புகள் வந்தது. தற்போது தீர்ப்பு வந்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்க இருக்கிறேன் என கூறினார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக தொண்டர்களால் அந்த இல்லம் கோவிலாக பார்க்கப்படுகிறது என கருத்து தெரிவித்திருக்கிறாரே என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அப்படி சொல்வது ஒன்றும் தவறல்ல, நாங்களும் அதைத்தான் சொல்கிறோம், அதனுடைய முக்கியத்துவம் அறிந்து தான் நாங்கள் அப்படி கூறுகிறோம். ஆனால் அதற்காக ஒரு தார்மீக ரீதியாக, சட்ட ரீதியாக, அதற்கு வாரிசுதாரர்கள் இருக்கும் பொழுது அவர்களிடம் இந்த சொத்து சேர்வதை எவரும் தடுக்க கூடாது. அந்த இல்லத்தை கோவிலாக பார்ப்பதோ, இல்லை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை தெய்வமாக பார்ப்பதோ அது அவர்களுடைய உரிமை. ஆனால் அது அவர்களுக்கு உடமை அல்ல. இது தொடர்பாக மேல் முறையீடு மனு தாக்கல் செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர். அப்படி மேல்முறையீடு செய்தால், நாங்களும் சட்டரீதியாக வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என அவர் கூறினார். 
 

click me!