இது உழைப்புச் சுரண்டல்.. நிரந்தர வேலையை ஒழித்துக்கட்டும் சதி.. அரசுக்கு எதிராக கொதிக்கும் ரவீந்திர நாத்.

By Ezhilarasan BabuFirst Published Nov 22, 2021, 1:40 PM IST
Highlights

நிரந்தர வேலையை ஒழித்துக்கட்டி வருகிறது. இது  உழைப்புச் சுரண்டல் நடவடிக்கையாகும். சமூக நீதிக்கு எதிரானதாகும். மத்திய அரசின் , இத்தகைய தொழிலாளர் விரோதப் போக்கை முறியடிக்க முன்வர வேண்டும் 

சுகாதாத்துறையில் ஒப்பந்த அடிப்படையிலான பணிநியமனங்களை கைவிட வேண்டும், ஊழியர்களை  நிரந்தர அடிப்படையில்  நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இது குறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கையில் விவரம் பின்வருமாறு:- அனைத்து வகை சுகாதாரத்துறை பணியிடங்களுக்கும், நிரந்தர அடிப்படையில் நியமனங்களைச் செய்யாமல்,  பெரும்பாலும் ஒப்பந்த  அடிப்படையில் , பணி நியமனங்களை சென்னை மாநகராட்சி தொடர்ந்து செய்து வருவது வருத்தத்தை அளிக்கிறது. இது கண்டனத்திற் குரியது. இது சமூக நீதிக்கு எதிரானது. மாநில அரசும் மருத்துவர்களையும்  சுகாதார ஆய்வாளர்களையும், செவிலியர்களையும், இதர ஊழியர்களையும்  ஒப்பந்த அடிப்படையில்  நியமித்து வருகிறது. (உதாரணம் . GO ( MS) NO : 516 dated 19.11.2021) 

சுகாதாரம் என்பது மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் இருக்கும் பொழுது ,  தேசிய சுகாதார இயக்கத்தை ( National Health Mission - NHM ) காரணம் காட்டி, அந்த இயக்கத்தின் மூலம் பணி நியமனம் செய்வதாகக் கூறிக் கொண்டு, பணியாளர்களை  தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது. பணி நியமனங்களில் தேசிய சுகாதார இயக்கம்  மூலம் , மத்திய அரசு தலையிடுவது மாநில உரிமைகளை பறிக்கும் செயலாகும். சுகாதாரத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் மத்திய அரசு, படிப் படியாக கொண்டு செல்லும் செயலாகும். நீட் தேர்வில் மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் தமிழக அரசு ,NHM மூலம் பணி நியமனங்களில் மாநில உரிமையை பறிக்கும் மத்திய அரசின் போக்கை எதிர்க்காதது வருத்தம் அளிக்கிறது. 

பணி நியமனங்களில் மாநில அரசின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். NHM மூலம் வரும் நிதியை பெற்றுக் கொண்டு ,கூடுதல் நிதியை தமிழக அரசு ஒதுக்கி, அனைத்து மருத்துவத்துறை பணியாளர்களையும், தமிழக அரசின் நேரடி ஊழியர்களாக நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும். உலக வங்கியின் ஆலோசனையின் அடிப்படையில்,NHM போன்ற திட்டங்கள் மூலம், மத்திய அரசு ஒப்பந்த முறையை ( Contract Basis), வெளிக் கொணர்வு முறையை ( Out Soursing ) திணிக்கிறது. நிரந்தர வேலையை ஒழித்துக்கட்டி வருகிறது.

இது  உழைப்புச் சுரண்டல் நடவடிக்கையாகும். சமூக நீதிக்கு எதிரானதாகும். மத்திய அரசின் , இத்தகைய தொழிலாளர் விரோதப் போக்கை முறியடிக்க முன்வர வேண்டும் என, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழ்நாடு அரசை  வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. அதே சமயம், ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில், தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்கள் ,செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் தமிழக அரசு பணிநிரந்தரம் வழங்கிட வேண்டும். கொரோனா காலத்தில் தற்காலிகமாக நியமிப்பட்டு, பணி புரிந்துவரும் அனைத்து ஊழியர்களுக்கும், பணி பாதுகாப்பும், பணிநிரந்தரமும்  வழங்கிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது .
 

click me!