எதிர்கால தலைமுறையை உருவாக்கும் இவர்களுக்கா இந்த கொடுமை.. அரசை எச்சரிக்கும் சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Feb 4, 2021, 9:28 AM IST
Highlights

தமிழகத்திலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் 1,761 சிறப்புப் பயிற்றுநர்கள், 402 இயன்முறை மருத்துவர்கள் , 824 பராமரிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என ஏறத்தாழ 3,000 பணியாளர்கள் கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர். 

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பயிற்றுநர்களை உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தற்காலிக பணியாளர்களாகப் பணியாற்றிவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பயிற்றுநர்களைப் பணிநிரந்தரம் செய்யக்கோரி எழுந்திருக்கும் கோரிக்கையையும், அதனை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களையும் நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ எனும் முதுமொழிக்கேற்ப எழுத்தறிவித்து நாளைய தலைமுறை பிள்ளைகளை, நாட்டின் வருங்காலத் தளிர்களை உருவாக்கக்கூடியவர்கள் ஆசிரியப் பெருமக்களென்றால், மிகையல்ல. அதிலும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்குக் கல்வி பயிற்றுவிப்பதற்குச் சற்று கூடுதலான திறமையும், அர்ப்பணிப்புணர்வும் தேவைப்படுகிறது. அத்தகைய பொறுப்புமிகு பணியைச் செய்துவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பயிற்றுநர்களைப் போற்றிப்பாதுகாக்க வேண்டிய அரசு அவர்களை அடிப்படை உரிமைகளுக்காகப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளியிருப்பது வேதனையின் உச்சமாகும். 

தமிழகத்திலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் 1,761 சிறப்புப் பயிற்றுநர்கள், 402 இயன்முறை மருத்துவர்கள் , 824 பராமரிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என ஏறத்தாழ 3,000 பணியாளர்கள் கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர். 1998 ஆம் ஆண்டு மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டத்தில் தொடங்கி , 2002 ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம், 2018 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் வரை பல்வேறு கல்வித்திட்டங்களின் கீழ் பள்ளிகளில் படிக்கும் 21 வகையான மாற்றுத்திறன் உடைய சுமார் 2 இலட்சம் குழந்தைகளுக்குச் சிறப்புக் கல்வி பயிற்சி அளித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, கடும் பாதிப்புள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு வட்டார வள மையத்திற்கு வரவழைத்தும், மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்றும் சிறப்புக்கருவிகள் மூலம் மறுவாழ்வு பயிற்சி அளிக்கும் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

ஆனால், கடந்த இருபது ஆண்டுகளாக இத்தகைய அரும்பணியில் ஈடுபட்டு வரும் சிறப்புப்பயிற்றுநர்கள் பணிநிரந்தரம் செய்யப்படாமல் தற்காலிகப் பணியாளர்களாகவே உள்ளனர் என்பதும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ விடுப்பு, மாத விடுப்பு, மகப்பேறு விடுப்பு, வருங்கால வைப்பு நிதி, ஈட்டுறுதி நிதி உள்ளிட்டக் குறைந்தபட்சச் சலுகைகள்கூட வழங்கப்படாமல் அவர்களைக் கொத்தடிமைகள் போல வைத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தங்களைப் பணிநிரந்தரம் செய்யவேண்டி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் இவர்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க மறுத்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. இந்நிலையில் சிறப்புப் பயிற்றுநர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக்கிளை பணிநிரந்தரக் கோரிக்கைக்கு எட்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.  

ஆனாலும், தமிழக அரசு இவ்விவகாரத்தில் மெத்தனப்போக்கோடே செயல்பட்டு வருவது மிக மோசமான நிர்வாகச்செயல்பாடாகும். ஆகவே, இனியும் தாமதிக்காது மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பயிற்றுநர்களை உடனடியாகப் பணிநிரந்தரம் செய்து, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் இதர சலுகைகளை அவர்களது பணிபுரிந்த ஆண்டினை கணக்கிட்டு வழங்கவேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசினை வலியுறுத்துகிறேன்.
 

click me!