தேர்தல் நடக்குமான்னே தெரியல... வேட்பாளர் தேர்வுக்கு ஏன் அவசரப்படணும்... அதிமுக கூல்..!!

By Asianet TamilFirst Published Jan 6, 2019, 11:23 AM IST
Highlights

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக, அமமுக குறித்த நேரத்தில் வேட்பாளரை அறிவித்த நிலையில், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணைய முடிவுக்கு பிறகு வேட்பாளரைத் தேர்வு செய்யலாம் என்று முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக, அமமுக குறித்த நேரத்தில் வேட்பாளரை அறிவித்த நிலையில், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணைய முடிவுக்கு பிறகு வேட்பாளரைத் தேர்வு செய்யலாம் என்று முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

திருவாரூர் இடைத்தேர்தலுக்கு 4-ம் தேதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள் என்று திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் அறிவித்திருந்தன. சொன்னபடி திமுகவும் அமமுகவும் வேட்பாளரை அறிவித்துவிட்டன. வேட்பாளரைத் தேர்வு செய்ய அதிமுகவின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் 4-ம் தேதிக்கு பதிலாக நேற்றுதான் கூடியது. வேட்பாளர் நேர்க்காணலும் நடந்தது. கூட்ட முடிவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என்று செய்தியாளர்கள் குவிந்திருந்தனர். ஆனால், இரண்டு நாட்களுக்குள் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று  துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

 

தேர்தலில் போட்டியிட பயமில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தெரிவித்தார். வேட்பாளர் தேர்வில் சென்ற முறை கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த பன்னீசெல்வமும் திருவாரூர் நகர அம்மா பேரவைச் செயலாளர் உமா கலியப்பெருமாளும் போட்டியில் முன்னணியில் உள்ளனர். வேறு சில பெயர்களுகளும்கூடப் பரிசீலனையில் உள்ளன. இவர்களில் யாரை நிறுத்தலாம் என்பதில் இழுபறி நீடித்ததாலேயே, வேட்பாளர் அறிவிப்பை அதிமுக ஒத்திவைத்துவிட்டது. 

ஆனால், அது மட்டுமே காரணமல்ல, திருவாரூர் இடைத்தேர்தலை நடத்தலாமா, வேண்டாமா என தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டது. அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகள் தேர்தலை நடத்த வேண்டாம் எனக் கேட்டுகொண்டன. ஆளும் கட்சியான அதிமுகவும் தேர்தலை விரும்பவில்லை. தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய அறிக்கையில் அரசின் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறும் என்பதால், தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்று ஆளும் தரப்பு நினைக்கிறது. 

மேலும் திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவைப் பிறப்பிக்கும் என்பது நாளை தெரிய வரும். உச்ச நீதிமன்ற உத்தரவைப் பொறுத்து தேர்தல் ஆணையமும் தேர்தல் நடத்துவது பற்றிய இறுதி முடிவை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளன.

இதில் தெளிவான முடிவு கிடைத்த பிறகு வேட்பாளரை அறிவிக்கலாம் என்றும் கட்சி நிர்வாகிகள் அபிப்ராயம்பட்டதாலும் வேட்பாளர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தை வேட்பாளரை இறுதி செய்ய எடுத்துக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்தே வேட்பாளர் தேர்வை ஒத்திவைத்துவிட்டார்கள். ஒரு வேளை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், வேட்பாளர் தேர்வுக்கே அவசியமில்லாமல் போய்விடும் அல்லவா? அதற்குள் ஏன் அவசப்பட வேண்டும் என்பதே ஆளும் தரப்பினரின் கேள்வி.

click me!