இடைத்தேர்தல் ரத்து எதிரொலி !! திருவாரூர் மாவட்டத்தில் உடனடியாக பொங்கல் பரிசு வழங்கப்படும்…முதலமைச்சர் அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Jan 7, 2019, 10:03 AM IST
Highlights

திருவாரூர் தொகுதியில் வரும் 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் அந்த மாவட்டத்தில் பொங்கல் பரிசான  1000 ரூபாய் பின்னர் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அங்கு  தேர்தல்  ரத்து செய்யப்பட்டு விட்டதால் தற்போது அம்மாவட்டத்தில் பொங்கல் பரிசு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் தைப் பொங்கல் திருநாளையொட்டி பொங்கல் பரிசாக குடும்பத்துக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் திருவாரூர் தொகுதியில் வரும் 28 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என கடந்த 31 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனயாக அமுலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் பொங்கல் பரிசு இடைத்தேர்தலுக்கும் பின் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

இந்நிலையில் திருவாரூரில் இன்னும் கஜா புயல் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றும், மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும், எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. 

இந்த கோரிக்கையை ஏற்று  திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இடைத்தேர்தல் பணிகளை நிறுத்துமாறு தமிழக தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

இதையடுத்து திருவாரூர் தொகுதியில் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொங்கல் பரிசு விநியோகிக்கும் திட்டம் உடனடியாக அமலுக்கு வரும் என்றும், அந்த மாவட்டம் முழுவதும் உடனடியாக பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

click me!