தலைதெறிக்க ஓடும் அ.தி.மு.க நிர்வாகிகள்...! திருவாரூர் இடைத்தேர்தல் பரிதாபம்..!!

By Selva KathirFirst Published Jan 3, 2019, 9:22 AM IST
Highlights

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆளை தேர்வு செய்ய முடியாமல் அ.தி.மு.க தலைமை திணறி வருகிறது. 

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆளை தேர்வு செய்ய முடியாமல் அ.தி.மு.க தலைமை திணறி வருகிறது. 

தேர்தல் என்று அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க சார்பில் போட்டியிட நீ நான் என்கிற போட்டி நிலவும். அதிலும் அ.தி.மு.கவில் அடிமட்ட தொண்டர் முதல் மாவட்டச் செயலாளர் வரை யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம். அவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கொடுக்கப்படும். 

ஜெயலலிதாவின் இதே பாணியை பின்பற்றித்தான் ஆர்.கே.நகர் தேர்தலுக்கு விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகான முதல் தேர்தல் என்பதால் ஆர்.கே.நகரில் போட்டியிட பலர் ஆர்வம் காட்டினர். அதிலும் முன்னாள் எம்.பி பாலகங்காவும், முன்னாள் அமைச்சர் மதுசூதனனும் ஆர்.கே.நகரில் களம் இறங்க பிரம்ம பிரயத்தனம் செய்தனர். இறுதியில் மதுசூதனனுக்கு தான் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.

 

ஆனால் ஜெயக்குமார் உள்ளடி வேலைகள் பார்த்து மதுசூதனனை கவிழ்த்தார். இது போதாறு என்று அமைச்சர்களும் கூட தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டவில்லை. அதாவது செலவுக்கு பணத்தை அவிழ்க்கவில்லை. இந்த விவகாரங்கள் எல்லாம் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளுக்கும் தெரியும். எனவே திருவாரூர் இடைத்தேர்தலின் போது அமைச்சர்களின் ஆதரவு கிடைக்காது என்று தற்போதே அங்கு முனுமுனுப்பு கேட்கிறது.

 

இந்த நிலையில் திருவாரூர் தொகுதிக்கான விருப்ப மனு அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. நேற்றில் இருந்தே விருப்ப மனு தாக்கல் செய்ய அந்த மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான காமராஜ் ஆட்களை தேடினார். ஆனால் முக்கிய நிர்வாகிகள் பலரும் ஏதேதோ காரணங்களை கூறி திருவாரூரில் போட்டியிட தயங்கியுள்ளனர். இந்த நிலைமை காலை வரை நீடிக்க வேறு வழியே இல்லாமல் காமராஜ் செய்தது தான் அசத்தல்.

 

அதாவது தனது மாவட்டத்தில் இருந்து தனக்கு நெருக்கமான ஒரு பத்து பேரை வரச் சொல்லி அவர்களிடம் தனது சொந்த பணத்தை கொடுத்து விருப்ப மனு வாங்கி தாக்கல் செய்யச் சொல்லியுள்ளார் காமராஜ். வந்தவர்களில் யாருமே சொல்லிக் கொள்ளும்படியான நிர்வாகிகள் இல்லையாம். திருவாரூர் தி.மு.கவிற்கு சாதகமான தொகுதி என்பதால் செலவு செய்து களம் இறங்க யாரும் தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் திருவாரூரில் யாரை வேட்பாளராக களம் இறக்குவது என்று அ.தி.மு.க தலைமை கைகளை பிசைந்து கொண்டிருக்கிறதாம்.

click me!