திருவாரூர் தேர்தல் ரத்து கட்சிகளுக்கு பேரானந்தமா? பேரதிர்ச்சியா?

By manimegalai aFirst Published Jan 7, 2019, 2:37 PM IST
Highlights

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து அறிவிப்பு முக்கிய இரு கட்சிகளுக்கு பேரானந்தத்தையும் ஒரு கட்சிக்கு பேரதிர்ச்சியையும் அளித்திருக்கிறது.
 

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து அறிவிப்பு முக்கிய இரு கட்சிகளுக்கு பேரானந்தத்தையும் ஒரு கட்சிக்கு பேரதிர்ச்சியையும் அளித்திருக்கிறது.

எதிர்பார்த்ததைப்போலவே திருவாரூர் இடைத்தேர்தலை தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருக்கிறது. ‘கஜா’ புயல் நிவாரணப் பணிகளைக் காரணம்  காட்டி முக்கியக் கட்சிகள் அதிமுக, திமுக ஆகியவை தேர்தலை ரத்து செய்ய விருப்பம் தெரிவித்திருந்தன. 

தினகரனின் அமமுக கட்சி தேர்தல்  நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. கஜா நிவாரணப் பணிகள் முக்கிய காரணம் என்றாலும், அதையும் தாண்டி இதில் அரசியல் இல்லாமல் இல்லை. 
கருணாநிதியின் தொகுதியான திருவாரூர் இடைத்தேர்தலில் எப்படியும் தக்க வைக்க வேண்டும் என்ற நெருக்கடியில் திமுக இருந்தது. 

திருவாரூருக்கு மட்டுமே தேர்தல் அறிவித்ததை திமுக ரசிக்கவில்லை. ஆர்.கே. நகர் தேர்தலைப்போல திமுகவுக்கு நெருக்கடி ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் நினைப்பதாக அக்கட்சி கருதியது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் கூறிவருகின்றன. 

திமுகவும் அந்த நம்பிக்கையில் தெம்பாக இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தலைச் சேர்த்து நடத்தினால், அது திமுகவுக்கு சாதகமாக முடியும் என்று திமுக கணக்குப் போடுகிறது. 

தனியாகத் தேர்தலில் நடத்தி, அதில் சறுக்கல் ஏற்பட்டால், அது நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று திமுக நினைத்தது. அந்த வகையில் தேர்தல் ரத்து திமுகவுக்கு பேரானந்தத்தைக் கொடுத்திருக்கிறது.

திமுகவைப் போலவே அதிமுகவும் இடைத்தேர்தலை எதிர்கொள்ள விரும்பவில்லை என்று திருவாரூர் இடைத்தேர்தலை இப்போது நடத்த வேண்டாம் என்று தலைமைச்செயலாளர் கடிதம் எழுதியிருப்பதே அதற்கு சாட்சி. எடப்பாடி அரசு மீது அதிருப்தி நிலவுகிறது; இந்த அரசு நீடிப்பதை மக்கள் விரும்பவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறிவருகின்றன.

திருவாரூர் இடைத்தேர்தல் நடந்தால், அது  அதிமுக அரசுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும். அது மட்டுமல்ல, ஆர்.கே. நகர் தொகுதியைப்போல அதிமுகவை முந்தி தங்களுக்குத்தான் தொண்டர்கள் பலம் இருப்பதாகக் காட்ட தினகரன் தரப்பு கடுமையாக முயற்சிக்கும் என்பதும் அதிமுகவுக்கு தெரிந்த விஷயம்தான். ஒரு வேளை அதிமுகவைவிட அமமுக கூடுதல் வாக்கு வாங்கினால், அது கட்சி ரீதியாகவும் ஆட்சி ரீதியாகவும் அதிமுகவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அதிமுகவும் தற்போதைக்கு தேர்தலை விரும்பவில்லை. தற்போது தேர்தல் ரத்து அறிவிப்பு அதிமுகவுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

தினகரனின் அமமுகவைப் பொறுத்தவரை அதிமுக கட்சியை மீட்க வேண்டும் என்பதுதான் அந்தக் கட்சியின் தற்போதைய அஜெண்டா. அந்தக் கட்சிக்கு திருவாரூர் இடைத்தேர்தல் இன்னொரு வாய்ப்பு. ஆர்.கே. நகரில் அதிமுகவை தோற்கடித்ததுபோல அதிமுகவையும் திமுகவையும் தோற்கடித்தால், மக்கள் ஆதரவு எங்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பதைக் காட்டிகொள்ள உதவியிருக்கும். ஒரு வேளை திமுக வெற்றி பெற்றாலும்கூட, அதிமுகவை மூன்றாம் இடத்துக்கு தள்ளினால்கூட, அந்தக் கட்சிக்கு அது வெற்றிதான். தற்போது அது நடைபெறாமல் போனதில் அமமுக் கட்சிக்கு மட்டுமே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 

click me!