முற்றுகிறது மோதல் ….டெல்லியில் தவம் கிடக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்!! மாற்றப்படும் திருநாவுக்கரசர் !!

By Selvanayagam PFirst Published Feb 2, 2019, 7:34 AM IST
Highlights

தமிழக காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருவதால் அதன் தலைவர் திருநாவுக்கரசரை மாற்றக் கோரி எதிர் தரப்பினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இதையடுத்து கட்சி மேலிடம் அவரை டெல்லிக்கு வரச் சொல்லியுள்ளதால் தற்போது திருநாவுக்கரசர் டெல்லி சென்றுள்ளார்.
 

அண்மையில் தமிழக காங்கிரஸ் கட்சி தனது நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் என்றும்; தலைவர் மாற்றம்  என்பது கிடையவே கிடையாது' என, டெல்லி பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், சஞ்சய்தத், ஸ்ரீவல்லபிரசாத் ஆகியோர் முன்னிலையில் திருநாவுக்கரசர் பேட்டி அளித்திருந்தார். 

இதனால் அதிருப்தி அடைந்த எதிர்கோஷ்டி தலைவர்கள், டெல்லியில் முகாமிட்டு, திருநாவுக்கரசரை மாற்றுமாறு, காங்கிரஸ்  தலைவர் ராகுலிடம் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில், தேர்தல் பணிகள் தொடர்பாக, தமிழக, காங்கிரஸ்  சார்பில், ஒருங்கிணைப்பு குழு, பிரசார குழு, தேர்தல் பணிக் குழு என, நான்கைந்து குழுக்களை அமைக்க, திருநாவுக்கரசர் திட்டமிட்டுள்ளார். 

அக்குழுக்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பட்டியலை தயார் செய்து, மேலிட ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளார்.அந்த பட்டியலில்,இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் ஆதரவாளர்கள் இடம்பெறவில்லை. இதுபற்றி புகார் வந்ததும், எல்லா தரப்பும் இடம்பெறும் வகையில், பட்டியலை புதுப்பித்து தரும்படி, ராகுல் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், திருநாவுக்கரசர், தன் குடும்பத்தினருடன், சீரடி சென்று, சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்தார். தன் பதவியை தக்க வைக்க வேண்டியும், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, எம்.பி.,யாக வேண்டியும் பிரார்த்தனை செய்து உள்ளார்.

சென்னை திரும்பியதும், அவரை  டெல்லி புறப்பட்டு வரும்படி, மேலிட தலைவர்கள் அவசர அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, திருநாவுக்கரசர் டெல்லி சென்றார்.ஏற்கனவே, அங்கு, சிதம்பரம், சஞ்சய்தத், ஸ்ரீவல்லபிரசாத், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட சிலர் முகாமிட்டுள்ளனர்.

இதனிடையே டெல்லியில், இன்று மேலிட தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. அதில், தமிழக, காங்கிரஸ் , தலைவர் பதவியில், திருநாவுக்கரசர் தொடர்ந்து நீடிப்பது குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் திருநாவுக்கரசு ஆதரவாளர்கள் அதனை மறுத்துள்ளனர்.

click me!