அரசு பள்ளியில் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் தனியார் பள்ளி மாணவர்கள் …. அசத்தும் பினராயி விஜயன் அரசு!!

By Selvanayagam PFirst Published Feb 1, 2019, 10:09 PM IST
Highlights

கேரளாவில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 2 லட்சத்து  50 ஆயிரம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசுப் பள்ளிகளின் தரத்தைப்பார்த்து அங்கு  சேர்ந்துள்ளனர். இது அந்த மாநிலத்தில் மிகப் பெரிய சாதனையா பார்க்கப்படுகிறது.

கேரளாவில் தற்போது உள்ள அரசுப் பள்ளிகள் மிகுந்த தரம் வாய்ந்ததாக உள்ளது. அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்கள், கட்டட வசதி, மாணவர்களின் நலனை பாதுகாத்தல் போன்ற கேரள அரசின் பிரமாதமான நடவடிக்கைளால் இந்த மேஜிக் நடந்துள்ளது.
அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள் கூட தனியார் பள்ளிகளால் இல்லை. அந்த அளவுக்கு அரசுப் பள்ளிகள் கேரளாவில் ஜொலிக்கின்றன. இந்நிலையில்தான் கடந்த  இரண்டு ஆண்டுகளில் மட்டும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த  2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.


கேரளாவில்  நேற்று முன்தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது,. 170 கோடி ரூபாயைக் கல்வி மேம்பாட்டுக்காக  ஒதுக்கியுள்ளது. அதில், 45,000 வகுப்பறைகளைத் தரம் உயர்த்தவும், லேப் வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
கோழிக்கோடு அருகில் சர்வதேச தரத்தில் ஒரு பள்ளியை கேரளா அரசு உருவாக்கியது. அது தொடங்கும்போதே வெளியிட்ட அறிவிப்பில், `அர்ப்பணிப்போடு பணியாற்றுபவர்களே அந்தப் பள்ளியில் வாய்ப்பு' என்று தெரிவித்திருந்தது. 


அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்கள் மட்டுமல்ல, கட்டட வசதி, மாணவர்கள் நலனைப் பாதுகாத்தல் என முன் மாதிரியான பள்ளியாக அது அமைந்திருந்தது. அதிலுள்ள வசதிகளுக்கு அருகில்கூட தனியார் பள்ளிகளால் வர முடியாது. அந்தளவுக்குச் சிறப்புகள் வாய்ந்ததாக இருந்தது. 


குறிப்பாக, 5 முதல் 12 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தனிக் கவனம் கொள்ளப்பட்டது. அந்தப் பள்ளி, தனியார் பள்ளிக்குச் செல்லும் பெற்றோர்களின் மன நிலையை அசைத்துவிட்டது. இந்த முன்மாதிரி பள்ளியின் செயல்பாடுகள் மாநிலம் முழுவதும் பரப்பப்பட்டது.

இதைத் தொடந்து அதே வசதிகளுடன் மாநிலம் முழுவதும் நூற்றுக் கணக்கான பள்ளிகளைத் தொடங்கியது கேரள அரசு. தற்போது தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி படை எடுத்து வருகின்றனர்.

click me!