உதய சூரியன் சின்னத்தில் திருமா... ஒப்புக்கொள்ள வைத்த ஆ.ராசா..!

By Selva KathirFirst Published Mar 5, 2019, 9:36 AM IST
Highlights

உதய சூரியன் சின்னத்தில் திருமாவளவன் போட்டியிட ஒப்புக் கொள்ள வைத்தது தி.மு.கவின் ஆ.ராசா என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

உதய சூரியன் சின்னத்தில் திருமாவளவன் போட்டியிட ஒப்புக் கொள்ள வைத்தது தி.மு.கவின் ஆ.ராசா என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதி என்று விசிகவுக்கு திட்டவட்டமாக கூறப்பட்டுவிட்டது. ஒரு தொகுதியை வாங்கி வட மாவட்டங்கள் முழுவதும் திமுகவுக்கு பணியாற்றுவதற்கு பேசாமல் தனித்தே களம் இறங்கலாம் என திருமாவளவன் பேச ஆரம்பித்துள்ளார். இந்த தகவல் ஆ.ராசாவுக்கு பாஸ் செய்யப்பட்டது. காரணம் திமுகவில் உள்ள உயர் மட்ட நிர்வாகிகளில் ஆ.ராசாவை தவிர வேறு யாரும் விசிக கூட்டணியில் இணைவதை விரும்பவில்லை. 

இதனால் ஆ.ராசா உடனடியாக ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். அப்போது திருமாவை கூட்டணியில் இருந்து வெளியேற்றுவது என்பது வட மாவட்டங்களில் தலித்துகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடம் என்று தெரிவித்துள்ளார். மேலும் விடுதலைச் சிறுத்தைகள் இல்லாமல் பாமக எதிர்ப்பு வாக்குகளை நாம் வட மாவட்டங்களில் பெற முடியாது. 2009 தேர்தலில் பாமக போட்டியிட்ட அத்தனை தொகுதியிலும் நம் கூட்டணி வென்றது.

 

இதற்கு காரணம் அப்போது பாமக மீதான வெறுப்பு நம் கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. திருமாவளவனும் இதற்கு உறுதுணையாக இருந்தார். எனவே திருமாவை கூட்டணியில் இருந்து வெளியேற அனுமதித்தால் அது நமக்கு எதிர்மறையாக வாய்ப்பு இருக்கிறது என்று ஆ.ராசா ஸ்டாலினிடம் பக்குவமாக கூறியுள்ளார். ஆனால் 2 தொகுதிகளுக்கு வாய்ப்பில்லை என்று மீண்டும் ஸ்டாலின் ஆ.ராசாவிடமும் கெடுபிடி காட்டியுள்ளார். அப்போது ஆ.ராசா கூறியது தான் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட அவரை சம்மதிக்க வைக்குறேன் என்பது தான். 

அதன் பிறகு ஞாயிறு இரவு முழுவதும் திருமாவிடம் பேசி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஆ.ராசா சம்மதிக்க வைத்துள்ளார். இதன் பிறகே திருமா அறிவாலயம் வந்து தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார். அப்போது உதய சூரியன் சின்னத்தில் போட்டி என்பதை ஒப்பந்தத்தில் குறிக்க வேண்டாம், அதனை நாங்களே எங்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனையை பெற்று அறிவிப்பதாக திருமா கூறியுள்ளார். 

அதற்கு ஸ்டாலின் ஒப்புக் கொள்ளவே தி.மு.க கூட்டணியில் திருமாவுக்கு 2 தொகுதிகள் பைனல் ஆகியுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் நிர்வாகிகளை அழைத்து பேசி உதயசூரியன் சின்னத்தில் போட்டி என்பதை திருமா அறிவிக்க உள்ளார். இதன் மூலம் நாடாளுமன்றத்திற்கு திருமா செல்லும் பட்சத்தில் அவர் திமுக எம்பியாகவே செயல்பட முடியும்.

click me!