திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்... தொல்.திருமாவளவன் அதிரடி!!

By Narendran SFirst Published Dec 23, 2021, 9:26 PM IST
Highlights

நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கனிமவளக் கொள்ளையை எதிர்த்து தர்மபுரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தின் பொழுது திமுகவினர் சிலர் ரகளையில் ஈடுபட்ட நிலையில் பொதுக்கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. திமுகவை விமர்சித்ததால் மேடைக்கு வந்த திமுக பிரமுகர் ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டதோடு நாற்காலியை தூக்கி மேடையில் இருந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது வீசினார். மேலும் மேடையையும் கலைக்க முற்பட்டார். காவல்துறையினர் முன்னிலையில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் பூதாகரம் ஆனதை அடுத்து பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தார். இது குறித்த அறிக்கையில், ஜனநாயக முறையில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் அராஜக முறையில் நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்று பேசியவர்கள் இதுபோன்று செயல்படுகிறார்கள் எனத் தெரிவித்திருந்தார்.

இதேபோல் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுக்குறித்த அவரது அறிக்கையில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அப்பகுதியில் உள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், பேச்சாளரை மேடையிலேயே கடுமையாகத் தாக்கியுள்ளனர். ஜனநாயக முறையில் நடைபெற்ற அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டத்தில், இவ்வாறு திமுக-வினர் அராஜகத்தில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தாக்குதல் நடத்திய ஆளும் கட்சியினரைத் தடுக்காமல், அங்கிருந்த காவல்துறை கைகளைக் கட்டியபடி வேடிக்கை பார்த்தது ஜனநாயகப் படுகொலையாகும். தனக்குக் கீழுள்ள காவல் துறையை, திமுகவினரின் ஏவல் துறையாக மாற்றி, எதிர்க்கட்சியினர் மீது ஆளும் கட்சியினர் நடத்தும் தாக்குதலையும், ஜனநாயகப் படுகொலையையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருத்துக்கு கருத்து தான் எடுத்து வைக்க வேண்டுமே தவிர  வன்முறையில் ஈடுபடக்கூடாது. நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். முன்னாள் அமைச்சரை கைது செய்ய நடவடிக்கையை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் திமுக அரசு தடுப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார் எல்லா அதிமுகவினர் மீதும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. குற்றச்சாட்டின் அடிப்படையில் மாநில காவல்துறை சட்டபூர்வமாக கடமையை செய்கிறார்கள் இதில், அரசு உள்நோக்கத்தோடு அதிமுகவை பழி வாங்குகிறது என பார்க்கத் தேவையில்லை என்று தெரிவித்தார். 

click me!