மணிரத்னம் மீதான வழக்கு: கருத்துரிமையை நீதிமன்றம் மூலம் பறிப்பதா..? மோடிக்கு திருமா காட்டமான கோரிக்கை!

By Asianet TamilFirst Published Oct 6, 2019, 8:46 PM IST
Highlights

அரசியலமைப்புச் சட்டத்தில் பாதுகாக்கப்பட்ட கருத்துரிமை என்பது ஆட்சியில் இருப்பவர்கள் விரும்பும் கருத்துகளைப் பேசுவதற்கான உரிமை அல்ல. குடிமக்கள் தாம் நினைக்கும் கருத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமையாகும். 

கருத்துரிமையை நீதித்துறையைப் பயன்படுத்தியே பறிக்க முயற்சிப்பது அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிப்பதாகும். இந்தப் போக்கை அனுமதிப்பது ஜனநாயகத்தை பாழ்படுத்திவிடும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:


பசுவின் பெயரால் நாடெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையைக் கட்டுப்படுத்தக் கோரி இயக்குனர் மணிரத்தினம், வரலாற்றறிஞர் ராமச்சந்திர குஹா, நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் கூட்டாகக் கடிதம் ஒன்றைக் கடந்த ஜூலை மாதத்தில் பிரதமருக்கு எழுதியிருந்தனர். அது நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகக் கூறி பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இவர்கள் அனைவர் மீதும் தேசத்துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது மக்களின் கருத்துரிமையைப் பறிப்பதாகும். மத்திய அரசு தலையிட்டு இந்த வழக்கை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். இது தொடர்பாக ஒரு லட்சம் பேரிடம் கையொப்பம் பெற்று பிரதமருக்குக் கடிதம் அனுப்பப்படும். நாட்டின் உயரிய பதவியான குடியரசுத் தலைவர் உள்ளிட்ட எவருக்கும் இந்திய நாட்டு குடிமக்கள் யாரும் கடிதம் எழுதுவதற்கு உரிமை உள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தில் பாதுகாக்கப்பட்ட கருத்துரிமை என்பது ஆட்சியில் இருப்பவர்கள் விரும்பும் கருத்துகளைப் பேசுவதற்கான உரிமை அல்ல. குடிமக்கள் தாம் நினைக்கும் கருத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமையாகும். இந்தக் கருத்துரிமையை நீதித்துறையைப் பயன்படுத்தியே பறிக்க முயற்சிப்பது அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிப்பதாகும். இந்தப் போக்கை அனுமதிப்பது ஜனநாயகத்தை பாழ்படுத்திவிடும்.


பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் எந்த ஒரு உண்மைக்குப் புறம்பான செய்தியோ யாரையும் புண்படுத்தக் கூடிய செய்தியோ இல்லை. நாட்டில் அப்பாவி மக்கள் பசுவின் பெயரால் படுகொலை செய்யப்படுகின்றனர். அது நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது என்பதைத்தான் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர். 2016 ஆகஸ்ட் 6; 2017 ஜூன் 30 மற்றும் ஜூலை 17 ஆகிய தேதிகளில்ம் பிரதமர் மோடியே பசுவின் பெயரிலான வன்முறையைக் கண்டித்துப் பேசியிருக்கிறார். அத்தகைய வன்முறையாளர்கள்மீது கடுமையாக நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியிருக்கிறார்.
இந்தத் தகவலை 2018 ஜூலை மாதத்தில் மாநிலங்களவையில் மத்திய உள்துறை துணை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். பிரதமர் பேசிய அதே கருத்தை கடிதத்தில் தெரிவித்தவர்கள் எப்படி தேசத்துரோகிகளாவார்கள்? மணி ரத்தினம் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்கை ரத்து செய்யவும், கருத்துரிமையைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒரு லட்சம் பேரிடம் கையொப்பம் பெற்று பிரதமருக்குக் கடிதம் அனுப்புவதென முடிவுசெய்துள்ளோம்.
இவ்வாறு அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

click me!