காந்தி ஒரு தீவிரவாதி... கோட்சே ஒரு பயங்கரவாதி... திருமாவளவனின் சர்ச்சை விளக்கம்!

By Asianet TamilFirst Published May 19, 2019, 8:51 AM IST
Highlights

காந்தியைச் சுட்டுகொன்ற கோட்சே பார்சியோ, சீக்கியரோ, கிறிஸ்தவரோ கிடையாது. கோட்சே ஒரு இந்து. அந்த அடிப்படையில்தான் கமலின் கருத்து வெளிப்பட்டிருக்கிறது. ஆனால், கோட்சே இந்து என்பதாலேயே அவரை தாங்கிப் பிடிக்கிறார்கள். 

மகாத்மா காந்தி இந்து தீவிரவாதி என்றால், நாதுராம் கோட்சே இந்து பயங்கரவாதி என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சியில் பிரசாரம் மேற்கொண்ட மநீம தலைவர் கமல்ஹாசன், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று கமல் பேசியது பெரும் சர்ச்சையானது. அவருடைய கருத்துக்கு இந்து அமைப்புகள் மட்டுமின்றி, பாஜக, அதிமுக, சிவசேனா போன்ற கட்சிகளும் எதிர்வினையாற்றின. அதேவேளையில் கமலுக்கு ஆதரவான கருத்துகளும் வெளிப்பட்டன.
கமலின் கருத்தை விசிக தலைவர் திருமாவளவன் வெளிப்படையாக ஆதரித்து பேசிவருகிறார். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் கமல் விவகாரத்தை கையில் எடுத்து பேசினார். அப்போது அவர், “காந்தியைச் சுட்டு கொன்ற கோட்சேவை பயங்கரவாதி என்று கமல் குறிப்பிட்டிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார். பிறகு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த விளக்கம் அளித்து திருமாவளவன் கருத்து கூறினார்.


“நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, காந்தியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் கோட்சே. அதை இந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும் கூறுகின்றன. காந்தியைச் சுட்டுகொன்ற கோட்சே பார்சியோ, சீக்கியரோ, கிறிஸ்தவரோ கிடையாது. கோட்சே ஒரு இந்து. அந்த அடிப்படையில்தான் கமலின் கருத்து வெளிப்பட்டிருக்கிறது. ஆனால், கோட்சே இந்து என்பதாலேயே அவரை தாங்கிப் பிடிக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் காந்தி ஒரு இந்து தீவிரவாதி என்றால், கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி.

 
இந்து மதத்தை தீவிரமாகப் பின்பற்றிய காந்தியையே சுட்டுக்கொன்றிருக்கிறார். இந்து என்ற சொல்லை மதத்துக்காகவோ கலாச்சாரத்துக்காவோ பயன்படுத்தினால் எந்தப் பிரச்னையும் இருக்கப்போவதில்லை. ஆனால், அதை அரசியலுக்குப் பயன்படுத்துவதால்தான் பிரச்னை எழுகிறது. முஸ்லீம் தீவிரவாதம் என்று இந்து அமைப்புகள் பேசுவதால்தான் இதுபோன்ற பேச்சும் எழுகிறது” என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கமல் பேசிய பேச்சே சர்ச்சையாகி இன்னும் ஓயாத நிலையில், திருமாவளவனும் அதிரடியாக கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

click me!