விடிய விடிய பிரதமர் மோடி தியானம்... 18 மணி நேர தியானத்துக்கு பிறகு வழிபாடு!

By Asianet TamilFirst Published May 19, 2019, 8:24 AM IST
Highlights

மோடி தியானத்தில் ஈடுபட்ட பிறகு அந்தப் பகுதியில் ஊடகங்களை அனுமதிக்க பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். கேதார்நாத்தில்  தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று பத்ரிநாத் செல்லவும் மோடி திட்டமிட்டுள்ளார். 

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் பனி லிங்க குகையில் அமர்ந்து பிரதமர் மோடி விடிய விடிய தியானத்தில் ஈடுபட்டார்.
நாடாளுமன்றத்துக்கு இறுதிகட்ட தேர்தல் இன்று நடைபெற உள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கி நாடு முழுவதும் 143 பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற மோடி, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காக தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.  இறுதிகட்டத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையில், பிரதமர் மோடிக்கு தற்போதுதான் ஓய்வு கிடைத்திருக்கிறது.
இதனையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்குள்ள கேதார்நாத் கோயிலுக்குச் செல்ல 2 கிலோ மீட்டர் தூரம் மலைப் பாதையில் நடந்து சென்றார். அப்போது பாரம்பரிய உடையில் சென்ற மோடி, கோயிலை அடைந்ததும் வழிபாடு நடத்தினார். மகாபாரதத்தில் பாண்டவர்கள் தவம் செய்ததாக கூறப்படும் பகுதியில் உள்ள சிறிய பனிக் குகைக்குள் சென்று மோடி, அங்கே அமர்ந்து தியானத்தைத் தொடங்கினார். விடியவிடிய மோடி தியானத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 18 மணி நேரம் மோடி தியானம் செய்ததாகக் கூறப்படுகிறது.

 
மோடி தியானத்தில் ஈடுபட்ட பிறகு அந்தப் பகுதியில் ஊடகங்களை அனுமதிக்க பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். கேதார்நாத்தில் காலையில் தியானத்தை முடித்த மோடி, பிறகு கோயிலில் சிறப்பு வழிபாடுன் நடத்தினார். கேதார்நாத்  பயணத்தை முடித்துவிட்டு இன்று பத்ரிநாத் சென்று வழிபாடு செல்ல உள்ளார். மாலையில் பிரதமர் மோடி டெல்லி திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கேதார்நாத்தில் நடைபெற்றுவரும் மேம்பாட்டு பணிகளையும் பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.
 

click me!