
5 மாநில தேர்தலில் பாஜக நான்கு மாநிலங்களில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமையும் என பாஜகவினர் கூறிவருகின்றனர். அதே நேரத்தில் தமிழகத்திலும் 2026 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைக்கும் என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். கோவா, மணிப்பூர் மாநிலத்தில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மக்கள் எப்படி பாஜகவிற்கு வாக்களித்தார்களோ அதே போல தமிழகத்திலும் பாஜகவை ஆதரிப்பார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். எனவே தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்ள தமிழக பாஜக தயாராக இருப்பதாக கூறினார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாஜக 4 மாநிலங்களில் ஆட்சியை தக்கவைத்து கொண்டதற்காக தென் மாநிலங்களையும் கைப்பற்றுவோம், தமிழகத்தையும் கைபற்றுவோம் என பாஜகவினர் கூறிவருவதாக தெரிவித்தார். வட இந்திய மாநிலங்களில் பாஜக செய்த சூழ்ச்சியால் இது போன்ற வெற்றியை குவிக்க முடிந்ததாக கூறினார். ஆனால் தமிழ்நாட்டில் பாஜகவின் சூது,சூழ்ச்சி ஒரு போதும் எடுபடாது என தெரிவித்தார். அதே நேரத்தில் 5 மாநில தேர்தல் முடிவுகள் எதிர்கட்சிகளுக்கு பாடம் புகட்டியுள்ளதாகவும் தெரிவித்தார். ஜனநாயக பாதுகாப்புக்கு ஆபத்து என்பதை எதிர்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
எனவே பாஜகவை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என மம்தா பானர்ஜி கூறியுள்ள கருத்தை தானும் வரவேற்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். , மேலும் தற்போது நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தாலும் பாஜகவை வீழ்த்தும் வலிமை கொண்ட இயக்கம் காங்கிரஸ் என கூறினார். எனவே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். பாஜகவை வீழ்த்தும் வியூகங்களை எதிர்கட்சிகள் அமைக்க வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தினார்.