
திமுக கூட்டிய அனைத்து கட்சிகூட்டத்துக்கு பலத்த எதிர்ப்பும் விமர்சனமும் கிளம்பி வரும் நிலையில் மக்கள் நலக்கூட்டணியில் ஊசலாடி கொண்டிருந்த திருமாவளவனும் மு.க.ஸ்டாலின் முகத்தில் கரியை பூசும் வகையில் கலந்துகொள்ள இயலாது என திருமா அறிவித்துள்ளார்.
திமுக சார்பில் கடந்த மாதம் தஞ்சையில் உண்ணாவிரதம் நடத்திய போது அதில் கலந்துகொண்ட ஸ்டாலின் தான் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட உள்ளதாகவும் , அனைத்துகட்சிகளுடன் பிரதமரை தேவைப்பட்டால் ஜனாதிபதியையும் சந்திப்போம் என்று அறிவித்தார்.
அதன் பின்னர் அந்த கூட்டத்துக்கு ஆதரவு இல்லை, ஆனால் விமர்சனம் வந்தது. இதையடுத்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாமல் அதையே அனைத்து விவசாயிகள் சங்க கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் மூன்று தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த நேரத்தில் மீண்டும் தேர்தலை மனதில் வைத்து மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்து அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் எழுதினார்.
இந்நிலையில் ஸ்டாலின் கூட்டும் கூட்டத்தில் கலந்துகொள்வதில் விசிகே திருமாவளவன் மற்றும் மற்ற கட்சிகள் இடையே வேறுபாடு ஏற்பட்டது. நான்கு கட்சிகளும் ஒன்றாக முடிவு எடுத்து அறிவித்த நிலையில் திருமாவளவன் மட்டும் மாறுபட்ட முடிவை எடுத்தார்.
தனது கட்சியின் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இந்நிலையில் மீண்டும் இடதுசாரி கட்சித்தலைவர்கள் மற்றும் வைகோவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாது என தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில் மூன்று தொகுதி இடைதேர்தல் நடக்க உள்ள நிலையில் நாங்கள் கலந்துகொள்வது அவ்வளவு உசிதமாக இருக்காது என்ற ரீதியில் தெரிவித்துள்ளார்.