தமிழக மக்களின் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றாங்க.. திராவிடர்கள், இந்துத்துவாதிகளை விளாசிய கார்த்தி சிதம்பரம்!

By Asianet TamilFirst Published Jan 15, 2022, 9:07 AM IST
Highlights

தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல் தேதியில்தான் கொண்டாட வேண்டும் என்று தான் இப்போது சொல்லவில்லை, கடந்த ஆண்டும்  தெரிவித்திருந்தேன் என்பதை தெரிவிக்கும் வகையில், கடந்த ஆண்டு பொங்கல் திருநாள் அன்று வெளியிட்ட வாழ்த்து செய்தியையும் கார்த்தி சிதம்பரம் மீண்டும் வெளியிட்டுள்ளார். 

சித்திரை முதல் தேதியில்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியிருந்த நிலையில், ‘இந்துத்துவா மற்றும் திராவிட அமைப்புகளில் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் தமிழக மக்களை தவறாகப் படிக்கின்றனர்’ என்று கார்த்தி சிதம்பரம் விளக்கியுள்ளார். 
 
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக கடந்த பத்து ஆண்டுகளாக பொங்கல் தினத்தில்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று கொண்டாடி வந்தார்கள். எனவே, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்ப் புத்தாண்டு தேதி மீண்டும் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தது. பொங்கல் திருநாளையொட்டி திமுக அரசு 21 பொருட்களைக் கொண்ட பரிசுத் தொகுப்பை அறிவித்தது. அதற்கான பரிசு பையில் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே, பையில் அச்சிடப்பட்ட வார்த்தைகள் தமிழர் திருநாள் வாழ்த்துகள் என்று மாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொங்கல் திருநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தையும் சேர்த்தே மக்களுக்குத் தெரிவித்தார். இதற்கு பாஜக, அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்தியமைச்சர் எல்.முருகன், “சித்திரை முதல் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என்று அனைவருக்கும் தெரியும்” என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வாழ்த்து தெரிவித்து தன்னுடைய ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அதில், “ அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். எனக்கு தமிழ் புத்தாண்டு சித்திரை 1-ஆம் தேதி அன்றுதான்” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருந்தார்.

கார்த்தி சிதம்பரத்தின் இந்தப் பதிவு திமுகவினரை சீண்டியது. எனவே, திமுகவினரும் ஆதரவாளர்களும் அவருடைய பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டனர். அதேவேளையில் பாஜகவினர் கார்த்தி சிதம்பரத்தின் பதிவுக்கு வரவேற்பு தெரிவித்தனர். அவருடைய பதிவுக்குக் கீழ் திமுகவை சாடி பதிவிட்டனர். இதனால், பொங்கல்  தினத்திலும் திமுக - பாஜக சண்டை தொடர்ந்தது. இதற்கிடையே தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல் தேதியில்தான் கொண்டாட வேண்டும் என்று தான் இப்போது சொல்லவில்லை, கடந்த ஆண்டும்  தெரிவித்திருந்தேன் என்பதை தெரிவிக்கும் வகையில், கடந்த ஆண்டு பொங்கல் திருநாள் அன்று வெளியிட்ட வாழ்த்து செய்தியையும் கார்த்தி சிதம்பரம் மீண்டும் வெளியிட்டுள்ளார். 

The extreme fringes of both the Hindutva & Dravidian org misread the people of TN. One believes that since the majority are practising Hindus, they negate the ethos propagated by Periyar. The other thinks since people vote for Dravidian parties, they negate tradition of Hinduism

— Karti P Chidambaram (@KartiPC)

மேலும் இதுதொடர்பாக மீண்டும் ஒரு பதிவு ஒன்றை கார்த்தி சிதம்பரம் வெளியிட்டுள்ளார். அதில், “இந்துத்துவா மற்றும் திராவிட அமைப்புகளில் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் தமிழக மக்களை தவறாகப் படிக்கின்றனர். பெரும்பான்மையானோர் இந்து மதத்தைப் பின்பற்றுவதால், அவர்கள் பெரியார் பரப்பிய நெறிமுறைகளை மக்கள் மறுக்கிறார்கள் என்று ஒருவர் நம்புகிறார். இன்னொருவர்ர் திராவிடக் கட்சிகளுக்கு வாக்களிப்பதால், இந்து மதத்தின் பாரம்பரியத்தை மக்கள் மறுப்பதாக நினைக்கிறார்கள்” என்று கார்த்தி சிதம்பரம்  தெரிவித்துள்ளார். கார்த்தி சிதம்பரம் பதிவிட்டது திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியதாலும் பாஜகவினர் ஆதரவு தெரிவித்ததாலும், இந்த முறை இரு கட்சியினருக்கும் பதிலளிக்கும் வகையில் இந்தப் பதிவை கார்த்தி சிதம்பரம் வெளியிட்டுள்ளார்.

click me!