தமிழிசையை முதல்வர் ஆக்க ஒத்திகை நடத்துகிறார்கள்... பழனியும் பன்னீரும் பாஜகவில்... பதறுகிறார் திவாகரன்!

First Published Nov 16, 2017, 2:36 PM IST
Highlights
they are trying to bring thamizisai soundarrajan as chief minister said dhivakaran


ஆளுநர் ஆய்வு நடத்துவதை அனுமதித்து பாஜக., தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனை முதல்வர் ஆக்க ஒத்திகை நடத்துகிறார்கள், பழனியும் பன்னீரும் பாஜக.,வில் இணைந்து விடுவார்கள் என்று கூறுகிறார் திவாகரன். 

மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோவிலில் இன்று துலா உற்ஸவத்தை முன்னிட்டு கடைமுக தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக சசிகலாவின் தம்பி திவாகரன் மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் தரிசனம் செய்தார். வியாழக்கிழமை இன்று காலை 8 மணியளவில் மாயூரநாதர் சுவாமி கோவிலில் திவாகரன் தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது,  கோவையில் ஆளுநர் பன்வாரிலால் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி உள்ளார். இதை அமைச்சர்கள் வரவேற்றுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதைப் பார்க்கும் போது ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனை நிறுத்தி முதல்வராக்கும் ஒத்திகை நிகழ்ச்சி போல் தெரிகிறது. 

முதலமைச்சர் எடப்பாடியும்  ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்து விடுவார்கள் போல் தெரிகிறது. தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் கேட்டுப் பெற அவர்கள் இருவருக்கும் திராணி இல்லை. அதிமுக இப்போதும் எங்களிடம்தான் உள்ளது. 

சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பிக்கள்தான் அதிமுக என நினைத்தால் அது தவறு. தமிழகத்தில் ஆட்சி உள்ள வரை மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் எல்லாரும் அதிமுகவில் இருப்பார்கள். ஆட்சி முடிந்த பிறகு அவர்கள் பாஜகவில் இணைந்துவிடுவார்கள் என்றார். 

பின்னர் தங்கள் குடும்பத்தினர் வீடுகளில் நடைபெற்ற சோதனைகள் குறித்துக்கூறியபோது,  இந்தியாவிலேயே மிகப் பெரிய வருமான வரி சோதனை எங்கள் குடும்பத்தினர் மீது நடந்தது.  ஆனால் அது தோல்வியில் முடிந்து விட்டது. முன்னர் அகில இந்திய மெடிக்கல் கவுன்சில் தலைவர் வீட்டில் 1500 கோடி பணம், 1 டன் நகைகள் வருமான வரி சோதனையில் சிக்கியது. அதன்பிறகு அது பற்றி எந்த  தகவலும் இல்லை. எனவே, இது எங்களை மிரட்டி அடிபணிய வைக்க நடந்த சோதனை. சமூக வலைதளங்களில் எங்கள் வீடுகளில் நடந்த சோதனைகள் குறித்து வருவதெல்லாம் பொய்... என்றார் திவாகரன். 

click me!