
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல், அதனை மறைக்க திமுக அரசு அதிமுக தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், தொழில்நுட்ப நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளை போடுகின்றனர் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி;- கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல், அதனை மறைக்க திமுக அரசு அதிமுக தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், தொழில்நுட்ப நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளை போடுகின்றனர். ஊழியர்களை பணியிட மாற்றம் செய்தது தான் திமுக அரசின் 100 நாள் சாதனை. திமுக அரசின் 100 நாட்களில் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகளை தற்போதைய அரசு கிடப்பில் போட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டம் முறையாக செயல்படவில்லை, திமுக அரசு முடக்கியுள்ளது. ஊழல், வசூல் செய்தல், பழிவாங்குதல் ஆகியவைதான் திமுகவின் குறிக்கோள். கரப்ஷன், கலெக்ஷன், வென்டேட்டா இதைத்தான் திமுக அரசு செய்து வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது கோடநாடு இல்லத்துக்கு சென்று ஓய்வெடுப்பது வழக்கம். அவர் மறைவுக்குப் பிறகு அந்த வீட்டில் சில கொள்ளை கும்பல், சயான் மற்றும் அவரின் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். அங்கிருந்த காவலாளி தடுத்தார். அப்போது, தாக்குதலுக்குட்பட்டு அவர் இறந்தார்.
இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. வழக்கு முடியும் தருவாயில் இருக்கின்ற இந்த சூழ்நிலையில், வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக அரசு நடத்துகிறது. கேட்டால், தேர்தல் அறிக்கையில் இருக்கிறது என்கிறார். தேர்தல் அறிக்கைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. முறையாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நீதிமன்ற விசாரணையை இதனுடன் ஒப்பிடக்கூடாது.
டிராஃபிக் ராமசாமி உயிருடன் இருந்தபோது, இந்த வழக்கை மறுவிசாரணை நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என, செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் 3 முறை மாறுபட்ட நீதிபதிகள் உத்தரவு வழங்கினர். இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள். குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு எதற்காக திமுக இவ்வளவு ஆதரவாக வாதாடிக் கொண்டிருக்கிறார்கள்? அந்த குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் ஆஜராகியிருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.