தெர்மாகோல், மெயின் ரோடு, டயர் நக்கி... தேர்தல் பிரசாரத்தில் புதிர் போட்ட உதயநிதி ஸ்டாலின்..!

By Asianet TamilFirst Published Mar 16, 2021, 9:26 PM IST
Highlights

அதிமுகவினர் உங்களிடம் ஓட்டு கேட்க வரும்போது, அவர்களிடம் ஒரே ஒரு கேள்வியைக் கேளுங்க. ஜெயலலிதா எப்படி இறந்தார் எனக் கேளுங்கள் என்று தேர்தல் பிரசாரத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 

திமுக வேட்பாளர் காந்தியை ஆதரித்து ராணிப்பேட்டையில் திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியை நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஓட ஓட விரட்டி அடித்தீர்கள். அதனால, மோடிக்கு தமிழகம் மீது கோபம் இருக்கிறது. அதனால்தான் ஜிஎஸ்டி வரியில் மட்டும் தமிழ்நாட்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடியை தரவில்லை அது நம்முடைய பணம். கேட்டால் நிதி பற்றாக்குறை என்று சொல்கிறார்கள்.
கொரோனா காலத்தில் மோடி மட்டும் ரூ.8,000 கோடிக்கு 2 சொகுசு விமானங்களை வாங்கியுள்ளார். ஏற்கனவே ஒரு நாடாளுமன்ற கட்டிடம் இருக்கும்போது ரூ.10 ஆயிரம் கோடியில் புதிதாக நாடாளுமன்ற கட்டிடம் கட்டுகிறார்கள். இதெல்லாம் யாருடைய பணம்? எல்லாம் தமிழ்நாடு மக்களுடைய பணம். உங்களின் வரிப்பணம். நீங்கள் கேட்டால் கொடுக்க மறுக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் தமிழ்நாட்டை மோடியிடம் அடமானம் வைத்துவிட்டார்கள். கொஞ்சம் ஏமாந்தால் தமிழ் நாட்டையே விற்றுவிடுவார்கள். அதிமுகவினர் உங்களிடம் ஓட்டு கேட்க வரும்போது, அவர்களிடம் ஒரே ஒரு கேள்வியைக் கேளுங்க. ஜெயலலிதா எப்படி இறந்தார் எனக் கேளுங்கள். மிகப்பெரிய மருத்துவமனையில் பாதுகாப்புக்காக நிறைய கேமராக்கள் இருக்கும். ஆனால், ஜெயலலிதா அங்கு அனுமதிக்கப்பட்ட பிறகு ஒரு கேமரா கூட வேலை செய்யவில்லை.
ஜெயலலிதா மறைவுக்கு விசாரணை கமிஷன் வேண்டும் என்று கேட்டவர்தான் ஓ. பன்னீர்செல்வம். அவர் கேட்டபடி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்த பிறகு பன்னீர்செல்வம் ஆஜராகாவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் வெளிவந்துள்ளது” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னதாக கூட்டத்தில் உதயநிதி பேசும்போது, “அதிமுக ஆட்சியில் எல்லா அமைச்சர்களுக்கும் பட்டப்பெயர்கள் உள்ளன. நான் சில பட்டப்பெயர்களை சொல்கிறேன்; நீங்கள் அவர்களுடைய பெயர்களை சொல்லுங்கள்” என்று சொன்னவர், “தெர்மாகோல், மெயின் ரோடு, குட்கா, எடுபுடி, டயர்நக்கி” என்று வரிசையாக பெயர்களைச் சொல்ல, கூடியிருந்தவர்கள் அமைச்சர்களின் பெயர்களைக் கூறினர். தொடர்ந்து பேசிய உதயநிதி, “ஓ.பன்னீர்செல்வத்தை டயர் நக்கி என்று நான் சொல்லவில்லை. அவர்களுடன் தற்போது கூட்டணி வைத்துள்ளாரே,  ராமதாஸ் அவர்தான்தான் அப்படி சொன்னார். அவர்தான் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்தார். தற்போது பணம் வாங்கி கொண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார்” என்று தெரிவித்தார்.
 

click me!