
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பகவந்த் மான் பஞ்சாப் மாநில அரசு அலுவலகங்களில் முதல்வரின் புகைப்படங்கள் இனி இடம்பெறாது என்றும், பகத்சிங், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் புகைப்படங்களே இடம்பெறும் என்றும் அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு மாநிலத்தில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி பல்வேறு மாநிலங்களில் செல்வாக்குப் பெற்று வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் வெறும் 20 இடங்களில் பஞ்சாபில் வெற்றி பெற்று எதிர்கட்டியான ஆம் ஆத்மி தற்போது அங்கு ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
அங்கு மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள காங்கிரஸ் போராடிய நிலையில் மக்கள் பாஜக, காங்கிரஸ் இரண்டையும் புறக்கணித்து ஆம் ஆத்மியிடம் ஆட்சியை கொடுத்துள்ளனர். கடந்த 2021 ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முன்னணித் தலைவர்கள் பஞ்சாபில் பிரச்சாரம் செய்து வந்தனர். அரவிந்த் கெஜ்ரிவால் முன்னெடுத்த பிரச்சாரங்கள் டெல்லி மாடல் என்பதை முன்வைத்து இருந்தது. அது பஞ்சாப் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. தனது பிரச்சாரத்தின் போது பஞ்சாபில் இருந்து வரும் தொடர் மின்வெட்டு மற்றும் மின்கட்டண குளறுபடிகளை முன்னிறுத்திப் பேசிய அவர் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் டெல்லியை போலவே பஞ்சாபிலும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தது பஞ்சாப் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதே போல் காங்கிரஸ் கட்சியில் நிலவிவந்த உள்கட்சி பூசல் அம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆம் ஆத்மி கட்சிக்கு அம்மாநில மக்கள் ஆட்சி அதிகாரத்தை வழங்கியுள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பகவந்த் மான் பகத்சிங்கின் பூர்விக கிராமமான நவன் ஷஹர் மாவட்டத்தில் உள்ள கட்கர்காலனில் தனது பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவித்துள்ளார். அப்போது அக்கூட்டத்தில் ஆரவாரம் எழுந்தது. மேலும் அரசு அலுவலகங்களில் வழக்கம் போல் முதல்வரின் புகைப்படம் இருக்காது என்றும் அறிவித்த அவர் அதற்கு பதிலாக பகத்சிங் மற்றும் சட்ட மேதை பி.ஆர் அம்பேத்கர் படங்கள் இருக்கும் என்றும் மான் கூறினார். அப்போது அக்கட்சி தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
பதவியேற்பு விழா என்பது ராஜ்பவனில் நடைபெறாது அது கற்ககாலத்தில் நடைபெறும் என்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். பள்ளிகள், சுகாதாரம், தொழில்துறை, விவசாயத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், பெண்களின் பாதுகாப்பு மற்றும் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் ஆகியவை தனது முக்கிய குறிக்கோளாக இருக்கும் என்றும் அவர் கூறினார். ஆம் ஆத்மி பதவியேற்ற ஒரு மாதத்தில் பஞ்சாப்பில் நீங்கள் மாற்றத்தை காண தொடங்குவீர்கள் என்றும் அவர் உறுதி அளித்தார். மக்கள் அனைவரும் மாற்றத்திற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்காதவர்களும் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் அரசாங்கம் பாடுபடும் என்றார். இந்நிலையில் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியில் வெற்றிக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த புரட்சிக்காக அம்மாநில மக்களுக்கு வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.