
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மறைந்த பொது, அவரது மனைவி ஜானகி, ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் இடையே போட்டி நிலவியது. ஜானகி அணி தோல்வியை தழுவியதும், அவர் எதிர்ப்பே இல்லாமல், ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்து விட்டார்.
ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அவருக்கு நிகரான மக்கள் தலைவர் யாரும் அதிமுகவில் இல்லை. ஜெயலலிதா இருக்கும் வரையில் திரை மறைவில் இருந்து ஆட்டி படைத்த சசிகலா, தொண்டர்களின் செல்வாக்கு இல்லாமலே, ஜெயலலிதாவின் இடத்தை பிடிக்க முயன்றார்.
ஆனால், பன்னீர்செல்வம் அவருக்கு எதிராக போர்க்கொடி பிடித்தார். சசிகலாவின் மீது தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் இருந்த வெறுப்பு, பன்னீருக்கு ஆதரவாக திரும்பியது. ஆனாலும், அவருக்கு பின்னால் பெரும்பாலான கட்சி நிர்வாகிகளோ, எம்.எல்.ஏ க்களோ அணிவகுக்கவில்லை.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதால், எடப்பாடி பழனிசாமியை அவர் முதல்வராக்கிவிட்டு சென்றார். தன்னுடைய உறவினர் தினகரனை துணை பொது செயலாளராகவும் நியமித்தார். ஆனால், இரட்டை இல்லை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரனும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எடப்பாடியை பொறுத்தவரை சசிகலாவால் நியமிக்கப்பட்ட முதல்வர். அவருக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு எதுவும் கிடையாது. அதனால், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்களை கட்டுப்படுத்த முடியாமல் அவர் திணறி வருகிறார்.
அதனால், எடப்பாடி தலைமையிலான ஆட்சி எத்தனைநாள் நீடிக்கும்? என்று யாருக்கும் தெரியாது. அது எடப்பாடிக்கும் தெரியும். அதனால் போகிறவரை போகட்டும் என்று அவர் இருக்கிறார். மறுபக்கம், குடியரசு தலைவர் தேர்தலுக்கு பின்னர், மத்திய அரசு என்ன முடிவு எடுக்க போகிறது? என்றும் யாருக்கும் தெரியாது.
அதே சமயம், பன்னீர் தம்முடைய மக்கள் செல்வாக்கை நிரூபிக்க அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டிய நிலை. ஒரு வேளை, எடப்பாடி அணியோடு பன்னீர் இணைந்தாலும், தற்போது அவர் திரட்டி உள்ள மக்கள் செல்வாக்கு, அவருக்கு தொடர்ந்து நீடிக்குமா? என்பது சந்தேகமே.
அதிமுக எம்.எல்.ஏ க்களை பொறுத்தவரை, தங்களது எஞ்சிய பதவிக் காலமான 4 ஆண்டுகளையும் சிக்கல் இல்லாமல் கழிக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்தில்தான் இருக்கின்றனர். அதனால், அவர்களுக்கு பன்னீரும் முக்கியம் அல்ல, எடப்பாடியும் முக்கியம் அல்ல. வேலுமணி, தங்கமணி, விருகம்பாக்கம் ரவி என யார் முதல்வர் ஆனாலும், அவர்களுக்கு கவலை இல்லை.
அதே சமயம், தற்போதுள்ள அதிமுக எம்.எல்.ஏ க்கள், தங்களை கட்டுப்படுத்த, ஜெயலலிதா போன்ற ஒரு ஆளுமை இல்லாததால், பல குழுக்களாக பிரிந்து கிடக்கின்றனர். அதுவே, அதிமுகவின் பெரிய பலவீனமாக உள்ளது.
குடியரசு தலைவர் தேர்தலுக்கு பின்னர், சேகர் ரெட்டி உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளை காரணம் காட்டி, எடப்பாடி ஆட்சியை, மத்திய அரசு கவிழ்க்க முயலும் வாய்ப்பும் உள்ளது.
அப்படி ஒரு நிலை வந்தால், தங்களது பதவிகளை காப்பாற்றிக்கொள்ளும் வகையில், எம்.எல்.ஏ க்களில் பெரும்பாலானோர் பிரிந்து, திமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்கும் மனநிலையில் இருப்பதாகவே கூறப்படுகிறது.
பாஜகவை பொறுத்தவரை, குடியரசு தலைவர் தேர்தலுக்கு பின் ஆட்சியை கலைத்துவிட்டு, சட்டமன்ற தேர்தல் நடத்தும் திட்டத்தில்தான் இருக்கிறது.
ஆனால், வெறும் 30 எம்.எல்.ஏ க்கள் மட்டுமே ஆட்சி அமைக்க தேவை என்ற நிலையில் இருக்கும் திமுக, ஆட்சி அமைக்க உரிமை கோரும் நிலையில் இருப்பதாலும், அதற்கு அதிமுக எம்.எல்.ஏ க்களே ஆதரவு தெரிவிக்க தயாராக இருப்பதாலும், தேர்தலை நடத்துவது அவ்வளவு எளிதல்ல.
அதையும் மீறி தேர்தல் நடந்தால், அதிமுக என்பது சிதறி கிடைப்பதால், அந்த கட்சியின் வாக்குகளும் சிதறி விடும். மேலும், அதிமுக சார்பில் யாரை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பது என்ற நிலை உள்ளதால், போட்டியிடுவதற்கு யாரும் முன்வரமாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
அதனால், அடுத்து சட்டமன்ற தேர்தல் வந்தால், அந்த தேர்தல் என்பது, திமுகவுக்கும் – பாஜகவுக்கும் இடையிலான தேர்தலாகத்தான் இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அரசியல் நோக்கர்களின் இந்த கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், நிராகரிக்கவும் முடியாது என்பதே உண்மை.