மதம் மாற்ற முயற்சி நடந்ததாக புகார் இல்லை.. லாவண்யா தற்கொலை காரணமானவர்களை சும்மாவிடமாட்டோம்.. அமைச்சர் அதிரடி.!

By vinoth kumarFirst Published Jan 24, 2022, 9:30 AM IST
Highlights

 தஞ்சை மாணவியை மத மாற்றம் செய்ய முயன்றதாக எந்த புகாரும் இல்லை. சக மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் மத மாற்றம் குறித்த புகார் வைக்கப்படவில்லை. 30க்கும் மேற்பட்ட சக மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள், அதற்கான விலையை தந்தே ஆக வேண்டும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (17) என்ற மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாவண்யா தற்கொலைக்கு மதம் மாற சொல்லி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக பாஜக குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஹாஸ்டல் வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தஞ்சை மாணவியை மத மாற்றம் செய்ய முயன்றதாக எந்த புகாரும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தஞ்சை மாணவியை மத மாற்றம் செய்ய முயன்றதாக எந்த புகாரும் இல்லை. சக மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் மத மாற்றம் குறித்த புகார் வைக்கப்படவில்லை. 30க்கும் மேற்பட்ட சக மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக யாரும் புகார் தெரிவிக்கவில்லை. மதம், சாதி, அரசியல் ரீதியான பாகுபாடுகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்கமுடியாது. மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் கண்டிப்பாக அதற்கான விலையை தந்தே ஆக வேண்டும். மாணவ, மாணவியர் எந்த புகாராக இருந்தாலும் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

 இதை பற்றி முதலில் பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும். அவசரப்பட்டு யாரும் தவறான முடிவை எடுக்க கூடாது. மாணவர்களுக்கு தங்களுக்கு விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால் அதை பற்றி பேச வேண்டும். உடனடியாக ஹெல்ப்லைன் மூலம் புகார் தெரிவிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

click me!