முதல்வரின் சொந்த மாவட்டத்தில் பொழைக்க வழியில்லை, கண்டுக்கவே மாட்டேங்கிறார் பழனிசாமி: எடப்பாடியை நோக்கி எகிறும் அவல கேள்விகள்.

First Published Feb 23, 2018, 3:46 PM IST
Highlights
There is no way to show up in the CMs own district Palanisamy the questions that go to Edappadi


தமிழகத்துக்கே முதல்வராக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ‘இந்த மாநிலம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது, மக்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.’ என்று மேடைக்கு மேடை பெருமை பேசுகிறார்.

ஆனால் அவர் பிறந்து, வளர்ந்து, ஜெயித்த சொந்த மாவட்டமான சேலத்தில் ‘இந்த மண்ணுல வாழ வழியில்லை. விவசாயத்துல தொடங்கி எல்லா வேலையும் பொய்ச்சு போச்சு. கவருமெண்டும் கண்டுக்க மாட்டேங்குது. அதனால குடும்பத்த காப்பாத்த குறுக்கு வழியில போற மக்கள் பொணமா ஊர் திரும்புறாங்க.’ என்று அவலக்குரல் கேட்பதுதான் குரூரம்.

கடந்த 18-ம் தேதியன்று ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு பக்கத்தில் ஒண்டிமிட்டா ஏரியில் 5 ஆண்களின் உடல் அழுகி, உப்பிய நிலையில்  கண்டெடுக்கப்பட்டது. தீவிர விசாரணையில் அவர்கள் தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டம் கருமந்துறை கிராம சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இந்த பிணங்களை ‘செம்மர கடத்தல் கும்பல்’ என்று முத்திரை குத்தி போஸ்ட்மார்டம் செய்து தூக்கிப் போட்டிருக்கிறது ஆந்திரா.

கருமந்துறை சுற்றுவட்டார மக்கள் பொதுவாக தை பொங்கல் முடிந்ததும் மைசூருக்கு காபி, மிளகு தோட்டத்துக்குதான் வேலைக்கு போவார்களாம். ஆனால் இந்த முறை ஆந்திராவுக்கு ஏன் சென்றார்கள்? என்பது மர்மமாக இருப்பதாக ஊர்ப் பெண்கள் புலம்பி தீர்க்கிறார்கள்.
“இந்த ஊர்ல வாழ வருமானமே இல்லை. வெவசாயம் பொய்ச்சு போச்சு. எங்க குடும்ப ஆம்பளைங்க கேரளா, கர்நாடகான்னு சுத்தி வேலை பார்த்துட்டு பணத்தோட வந்தால்தான் குடும்பத்தை நடத்த முடியும்.

எங்க கிராமத்தோட வறுமையை நிலையை பார்த்துட்டு, இங்கே இருக்கிற திடகாத்திர ஆம்பளைகளை சில புரோக்கருங்க செம்மர கடத்தலுக்கு திருட்டுத்தனமா அழைச்சுட்டு போற கொடுமை இப்ப துவங்கியிருக்குது. குடும்பத்துட்ட ‘நான் கர்நாடகாவுக்கு மிளகு தோட்டத்துக்கு வேலைக்கு போறேன்’ன்னு சொல்லிட்டு இப்படி ஆந்திராவுக்கு செம்மர கடத்தலுக்கு போயிருக்காங்க. தப்பான தொழில்னு தெரியும், ஆனா கொஞ்ச நாள் வேலை பார்த்தாலும் கூலி அதிகமா கிடைக்குமே!ங்கிற ஆசையில போயிருக்காங்க.

பையனை படிக்க வைக்கிறது, புள்ளைய கலியாணம் பண்ணி கொடுக்குறதுன்னு ஆயிரத்தெட்டு செலவுகள். வேற வழி! அதான் இப்படியொரு முடிவை எடுத்திருக்காங்க.

புரோக்கர் கூட செம்மரம் வெட்டத்தான் போறோமுன்னு தெரியாம, ஏதோ மரம் வெட்டுற தொழிலுக்கு போறோமுன்னு நினைச்சுட்டு போன அப்பாவிகளும் இருக்கிறாங்க.

என்ன பண்றது? அரசாங்கம் எங்க மேலே கரிசனம் காட்டினா, எங்க மக்கள் ஏன் இப்படி ஊரை விட்டு வெளியில பொழைக்க போறாங்க? முதல்வரோட சொந்த மாவட்டமுன்னுதான் பெருமையான பேரு. ஆனா பொழைக்க வழியில்லாம நாசமாகி கிடக்குறோம். 

மாற்று விவசாயம் பண்ண வழி, வங்கி கடன், தொழிற்சாலையில் கூலி வேலைன்னு ஏதாச்சும் வாய்ப்பு ஏற்பாடு பண்ணி கொடுத்து எங்களை பொழைக்க வைக்கலாமில்லையா? ஆனா அதை செய்ய மாட்டேங்கிறாரே முதல்வர்.

சொந்த மாவட்டத்துக்காரன் இப்படி செத்துக் கிடக்குறான், அவரு கொஞ்சமாச்சும் கவலைப்பட்டாரா?” என்று கேள்விகள் எழுகின்றன கன்னாபின்னாவென.
எடப்பாடியார் என்ன செய்யப்போகிறார்?

click me!