#BREAKING வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு.. தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..!

By vinoth kumarFirst Published Aug 25, 2021, 1:50 PM IST
Highlights

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன், அரசியல் லாபத்துக்காக சட்டம் இயற்றப்பட்டதாக அந்த மனுக்களில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடுக்கு தடையில்லை என இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.  வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து 20க்கும் மேற்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. அதில், சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன், அரசியல் லாபத்துக்காக சட்டம் இயற்றப்பட்டதாக அந்த மனுக்களில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள், கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, எந்த தடையும் இல்லை என, தெரிவித்தது. அதன் அடிப்படையில், இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், 1983ல் கணக்கெடுப்பு நடத்தியது. அந்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில், இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்குகள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில், நியமனங்கள் நடந்து வருவதால், அதை தடுக்கும் வகையில் சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று, மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பில், அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள் ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை. அதனால், சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிடப்பட்டது. இடைக்கால கோரிக்கை மீதான வாதங்களை இன்று முன்வைக்க, இரு தரப்புக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், அப்போது, இடைக்கால உத்தரவு குறித்து முடிவு எடுப்பதாக தெரிவித்தனர்.

இந்த இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கின் இறுதி விசாரணைக்கு தயாராக இருப்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து, வன்னியர்களுக்கு 10.5 சதவீத  இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.  இதனையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 14-க்கு ஒத்திவைத்தது.

click me!