
நிபந்தனை இல்லாமல் அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையை நடத்த முடியாது என்று ஓ.பி.எஸ்.ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவின இரு அணிகளையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்பதே தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி. நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என்று எடப்பாடி அறிவித்தாலும், அதற்கு பன்னீர்செல்வம் அணி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பன்னீர் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி என்ற முடிவுக்கு எடப்பாடி டீம் சென்று விட்டநிலையில் நாளை முதல் தமிழகம் முழுவதும் ஓ.பி.எஸ். சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அணிகள் இணைப்புக்கும் சுற்றுப்பயணத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்த ஓ.பி.எஸ். அணி, உள்ளாட்சித் தேர்தலே சுற்றுப்பயணத்திற்கான காரணம் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் நிபந்தனை தளர்ப்பு என்ற பேசுக்கே இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்று முதல் அமைச்சர் தெரிவித்திருப்பதை வரவேற்பதாகவும் பாண்டியராஜன் கூறியுள்ளார்.